கால்நடை தீவன ஆலையில் தீ; ரூ.1 கோடி பொருட்கள் நாசம்
கால்நடை தீவன ஆலையில் தீ; ரூ.1 கோடி பொருட்கள் நாசம்
ADDED : மார் 29, 2024 06:40 AM

மங்களூரு : கால்நடை தீவனம் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில், 1 கோடி ரூபாய் பொருட்கள் எரிந்து நாசமாகின.
மங்களூரு அருகே பைக்கம்பாடி தொழிற்பேட்டையில், கோழி இறைச்சியில் இருந்து, கால்நடை தீவனம் தயாரிக்கும் ஆலை உள்ளது. நேற்று காலை 6:00 மணிக்கு அந்த ஆலையில் இருந்து, புகை கிளம்பியது.
சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிந்தது. அந்த வழியாக சென்றவர்கள் ஆலையின் உரிமையாளர் முகமது சமீருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
பாண்டேஸ்வர், கத்ரி தீயணைப்பு நிலையங்களில் இருந்து, மூன்று தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்து சென்றன. ஆலையில் பிடித்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயணைப்பு படையினர் அணைத்தனர்.
“பாக்கெட்டுகளில் தயாரித்து வைக்கப்பட்டு இருந்த கால்நடை தீவனம், உபகரணங்கள் ஆகியவை தீயில் எரிந்து நாசமாகின. இதன் மதிப்பு 1 கோடி ரூபாய்,” என, உரிமையாளர் முகமது சமீர் கூறி உள்ளார்.
தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து, பாண்டேஸ்வர் போலீசார் விசாரிக்கின்றனர்.

