முதன் முதலாக லோக்சபா தேர்தல் களம் வேட்பாளர்கள் மனதில் பட்டாம்பூச்சி
முதன் முதலாக லோக்சபா தேர்தல் களம் வேட்பாளர்கள் மனதில் பட்டாம்பூச்சி
ADDED : மே 03, 2024 06:43 AM
கர்நாடகாவில் வரும் 7ம் தேதி இரண்டாம் கட்டமாக 14 தொகுதிகளுக்கு, லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. 14 தொகுதிகளிலும் இரு கட்சிகளிலும் பெரும்பாலான வேட்பாளர்கள், முதல் முறை லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
சிக்கோடி: காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா, 27, களத்தில் உள்ளார். பொதுப்பணி அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி மகள். எம்.பி.ஏ., பட்டதாரியான பிரியங்கா, தந்தைக்கு சொந்தமான சர்க்கரை ஆலைகளை கவனித்தார். இவர், முதல் முறையாக களத்தில் குதித்துள்ளார்.
பெலகாவி: பா.ஜ., வேட்பாளராக போட்டியிடும் ஜெகதீஷ் ஷெட்டர், 68. அரசியல் அனுபவம் வாய்ந்தவர். முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், சபாநாயகர், மாநில தலைவர் பதவியை அனுபவித்தவர். ஆனால், லோக்சபா தேர்தலுக்கு இதுவே முதல் முறை. காங்கிரஸ் வேட்பாளர் மிருணாளும், 31 முதல் முறை தான். இவர் அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரின் மகன்.
பாகல்கோட்: காங்கிரஸ் வேட்பாளர் சம்யுக்தா, 30. அமைச்சர் சிவானந்தா பாட்டீல் மகள். முதல் முறை தேர்தலில் போட்டியிடுகிறார். தந்தை செல்வாக்கை பயன்படுத்தி வெற்றி பெறலாம் என்று நினைத்து இருக்கிறார்.
விஜயபுரா: காங்கிரஸ் வேட்பாளர் ராஜு அல்குர், 60. ஒரு முறை எம்.எல்.ஏ., அனுபவம். முதல் முறை லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார்.
கலபுரகி: காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணா தொட்டமணி, 60. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மருமகன். மாமனார் வெற்றிக்காக பல ஆண்டுகள், திரைமறைவில் வேலை செய்து உள்ளார். முதல்முறை தேர்தல் அரசியலுக்கு வந்து உள்ளார்.
ராய்ச்சூர்: காங்கிரஸ் வேட்பாளர் குமார் நாயக், 60. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி. பதவி காலம் முடிந்ததும், காங்கிரசில் இணைந்தார். ராய்ச்சூரில் கலெக்டராக பணியாற்றிய அனுபவம் உடையவர். தேர்தலில் போட்டியிட முதல் முறை வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.
பீதர்: காங்கிரஸ் வேட்பாளர் சாகர் கன்ட்ரே, 26. அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே மகன். சாகர் வக்கீல் ஆவார். இளைஞர் காங்கிரசில் இருந்து வந்தவர். பாரம்பரிய அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால், இளைஞராக இருந்தாலும் காங்கிரஸ் வாய்ப்பு கொடுத்து உள்ளது. முதல்முறை தேர்தலில் போட்டியிடுவதை நினைத்து, மகிழ்ச்சியில் உள்ளார்.
கொப்பால்: பா.ஜ., வேட்பாளர் பசவராஜ் கியாவடார், 47; டாக்டர். சிட்டிங் எம்.பி.,யாக இருந்த கரடி சங்கண்ணாவை ஒதுக்கிவிட்டு, பசவராஜ் கியாவடாருக்கு பா.ஜ., சீட் கொடுத்து உள்ளது. இவரும் முதல் முறை தான்.
பல்லாரி: காங்கிரஸ் வேட்பாளர் துக்காராம், 57. பல்லாரி சண்டூரில் இருந்து நான்கு முறை தொடர்ந்து, எம்.எல்.ஏ., ஆனவர். ஒரு முறை அமைச்சராக இருந்த அனுபவம் உள்ளது. ஆனாலும் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது இது முதல்முறை.
ஹாவேரி: காங்கிரஸ் வேட்பாளர் ஆனந்த்சாமி கடேதேவரமத், 47. பெலகாவி சட்டசபை தொகுதியில் 2013 தேர்தலில், சுயேச்சையாக போட்டியிட்டு தோற்றவர். ஆனாலும் காங்கிரஸ் வாய்ப்பு கொடுத்தது. முதல் முறை லோக்சபா தேர்தலில் களம் காண்கிறார்.
தார்வாட்: காங்கிரஸ் வேட்பாளர் வினோத் அசூட்டி, 34. இதற்கு முன்பு எந்த தேர்தலிலும் போட்டியிட்ட அனுபவம் இல்லை. முதல்முறையாக லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார். வெற்றி பெறும் முனைப்பில் உள்ளார்.
உத்தர கன்னடா: பா.ஜ., வேட்பாளர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி, 62. ஆறு முறை எம்.எல்.ஏ., ஒரு முறை சபாநாயகராக பணியாற்றி உள்ளார். ஆனாலும் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது இது முதல்முறை. காங்கிரஸ் வேட்பாளர் அஞ்சலி நிம்பால்கர், 47. ஒரு முறை எம்.எல்.ஏ., ஆக இருந்தவர். இவருக்கும் லோக்சபா தேர்தல் புதுசு.
தாவணகெரே: சிட்டிங் எம்.பி., சித்தேஸ்வருக்கு பதிலாக அவரது மனைவி காயத்ரி, 69, பா.ஜ., சார்பில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் வேட்பாளர் பிரபா, 48. தொழிலில் டாக்டர். அமைச்சர் மல்லிகார்ஜுன் மனைவி. இவரும் லோக்சபா தேர்தலில் புதுசு.
ஷிவமொகா: பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்ட ஈஸ்வரப்பா, 75. சுயேச்சையாக போட்டியிடுகிறார். பா.ஜ.,வில் துணை முதல்வர், மாநில தலைவர், எம்.எல்.ஏ., உள்ளிட்ட பதவிகளில் இருந்தவர். லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது இது முதல் முறை- நமது நிருபர் -
.