முதலில் ரேபரேலியில் ஜெயிங்க ராகுலை கிண்டல் செய்த காஸ்பரோவ்
முதலில் ரேபரேலியில் ஜெயிங்க ராகுலை கிண்டல் செய்த காஸ்பரோவ்
ADDED : மே 04, 2024 11:50 PM

புதுடில்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலை கிண்டல் செய்து, ரஷ்யாவைச் சேர்ந்த முன்னாள் செஸ் சாம்பியன் கேரி காஸ்பரோவ் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அதன்பின், ஜோக் அடித்ததாக அவர் விளக்கம் அளித்து உள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், கேரளாவின் வயநாடு தொகுதியில் லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார்.
வேட்பு மனு தாக்கல்
இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
இதை பா.ஜ., விமர்சித்துள்ளது.
காங்., பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ், சமூக வலைதளத்தில் இது குறித்து குறிப்பிடுகையில், 'ராகுல், செஸ் விளையாட்டில் தேர்ந்தவர்.
'அரசியலிலும் தேர்ந்தவர். ரேபரேலியில் போட்டியிடுவது ஒரு அரசியல் சதுரங்க விளையாட்டு' என கூறியுள்ளார்.
இது குறித்து சமூக வலைதளத்தில் ஒருவர் பதிவிட்ட செய்தியில், 'நல்லவேளை கேரி காஸ்பரோவ், விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் ஓய்வு பெற்றுவிட்டனர். இல்லாவிட்டால் கடுமையான சவாலை சந்திக்க நேரிட்டிருக்கும்' என, குறிப்பிட்டார்.
ரஷ்யாவைச் சேர்ந்த முன்னாள் உலகச் சாம்பியனான கேரி காஸ்பரோவ், செஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றுஉள்ளார்.
அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். ராகுல் குறித்து அவர் முதலில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், 'உங்கள் பாரம்பரியத்தை பார்க்கும்போது, முதலில் ரேபரேலியில் வெற்றி பெற முயற்சி செய்யுங்கள். தலைமை பதவிக்கு பின் போட்டியிடலாம்' என, கூறியிருந்தார்.
ஒரு ஜோக் தான்
பிறகு மற்றொரு பதிவை அவர் வெளியிட்டாார். அதில், 'நான் கூறியது ஒரு ஜோக் தான். எனக்கு மிகவும் பிடித்த செஸ் விளையாட்டில், ஒரு அரசியல்வாதி குதித்துள்ளதை ஏற்க முடியாமல் அவ்வாறு ஜோக்காக குறிப்பிட்டேன். இதற்கு எந்த அர்த்தத்தையும் எடுத்து கொள்ள வேண்டாம்' என, கூறியுள்ளார்.