ADDED : மே 12, 2024 07:14 AM

பெலகாவி: நான்கு மாதங்களாக வெயிலால் பாதித்த ஒரு விவசாயி, நேற்று பெய்த மழையால் உற்சாகமடைந்து நடனமாடும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
கர்நாடகாவில் கடந்த நான்கு மாதங்களாக வெயில் வாட்டி வதைக்கிறது. பல ஏரிகள், குளங்கள் வற்றிவிட்டன. அணைகளில் இருந்தும் திறந்து விடப்படும் தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக மாநிலம் முழுதும் பல இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
பெலகாவியில் நடப்பாண்டு, முதல் மழை நேற்று பெய்தது. இதனால், இம்மாவட்டத்தின் ஹுக்கேரி போரகல் கிராமத்தை சேர்ந்த விவசாயி ரமேஷ் மகதும்மா உற்சாகம் அடைந்தார்.
மழையில் நனைந்தபடி, 'கங்கையே இறங்கி வா... இறங்கி வா...' என உற்சாகத்துடன் நடனமாடினார்.
இந்த நடனத்தின் மூலம், விவசாயி தனது நிலத்தின் மீது வைத்துள்ள பாசம் எவ்வளவு பெரியது என்பது தெரிந்தது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. பலரும் அவரின் உற்சாக நடனத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.