ராணுவ மருத்துவ சேவை பிரிவுக்கு முதல் முறையாக பெண் இயக்குனர்
ராணுவ மருத்துவ சேவை பிரிவுக்கு முதல் முறையாக பெண் இயக்குனர்
ADDED : ஆக 01, 2024 11:40 PM

புதுடில்லி: ராணுவ மருத்துவ சேவைகள் இயக்குனராக, லெப்டினன்ட் ஜெனரல் சாதனா சக்சேனா நேற்று பொறுப்பேற்றார். இந்த பதவிக்கு நியமிக்கப்படும் முதல் பெண் அதிகாரி இவர்.
ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:
ராணுவத்தின் மருத்துவ சேவைகள் இயக்குனராக, இதுவரை பெண்கள் யாரும் பதவி வகித்தது இல்லை. இந்நிலையில், சாதனா சக்சேனா நேற்று பொறுப்பேற்றார்.
இவர், புனே ஆயுதப்படை மருத்துவக் கல்லுாரியில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் பெற்றவர். 1985 டிசம்பரில் ராணுவ மருத்துவ படைப்பிரிவில் சேர்ந்தார்.
பின், விமானப் படையின் முதல் பெண் முதன்மை மருத்துவ அதிகாரி உட்பட பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தார்.
சாதனா சக்சேனா, இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளுடன் இணைந்து ரசாயனம், உயிரியல், கதிரியக்கம் மற்றும் அணு ஆயுதப் போர் ஏற்படும்போது கடைப்பிடிக்க வேண்டிய மருத்துவ நெறிமுறைகளில் பயிற்சி பெற்றவர்.
டாக்டர் கஸ்துாரிரங்கன் தலைமையிலான தேசிய கல்வி கொள்கை தயாரிப்பு குழுவில், மருத்துவ கல்வி தொடர்பான பகுதியை உருவாக்கும் பணியில் உறுப்பினராக செயல்பட்டவர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.