கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம் எச்சரிக்கையை மீறிய மீனவர்கள்
கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம் எச்சரிக்கையை மீறிய மீனவர்கள்
ADDED : ஆக 27, 2024 04:40 AM
யாத்கிர் : பசவசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால், கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் எச்சரிக்கையை மீறி, மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர்.
யாத்கிர், ஹுனசகியின் நாராயணபுரா கிராமத்தில் பசவசாகர் அணை உள்ளது. தொடர் மழை காரணமாக, அணையில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
அணையின் மொத்த கொள்ளளவு 33.33 டி.எம்.சி., தற்போது அணையில் 30.83 டி.எம்.சி., தண்ணீர் இருப்பு உள்ளது.
முன்னெச்சரிக்கையாக அணையில் மொத்தம் உள்ள 30 மதகுகளில், 25 மதகுகள் திறக்கப்பட்டு உள்ளன. 1,20,800 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இதனால் கிருஷ்ணா ஆற்றில் அபாய கட்டத்தைத் தாண்டி, வெள்ளம் பாய்ந்தோடுகிறது.
'எனவே பொதுமக்கள், ஆற்றங்கரைக்குச் செல்ல வேண்டாம். சிறு குழந்தைகள், கால்நடைகளை அங்கு செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மீனவர்கள் மீன்பிடிக்க ஆற்றில் இறங்கக் கூடாது' என, யாத்கிர் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இந்த எச்சரிக்கையை, மீனவர்கள் பொருட்படுத்தவில்லை. வெள்ளம் பாய்ந்தோடும் ஆற்றில் இறங்கி மீன் பிடிக்கின்றனர்.
மீனவர்கள் மீன் பிடிக்கும் வீடியோ, சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

