ADDED : ஆக 15, 2024 04:03 AM

விஜயபுரா : விஜயபுராவில் நடந்த வக்கீல் கொலையில், கூலிப்படையை சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
விஜயபுராவின் இண்டி அகரகேடா கிராமத்தை சேர்ந்தவர் ரவி மெலிமணி, 37. விஜயபுரா நீதிமன்றத்தில் வக்கீலாக இருந்தார். கடந்த 8ம் தேதி இரவு, பைக்கில் வெளியே சென்றிருந்தார். அந்த வழியாக வந்த கார், பைக் மீது மோதியது. காரின் அடியில் சிக்கிய ரவி 2 கி.மீ., துாரம் இழுத்துச் செல்லப்பட்டார். படுகாயம் அடைந்து ரவி இறந்தார்.
இண்டி போலீசார் நடத்திய விசாரணையில், பைக் மீது காரை ஏற்றி அவரை மர்ம நபர்கள் கொன்றது தெரியவந்தது. ரவி, பீமாதீரா கூலிப்படை கொலை கும்பலை சேர்ந்த பாகப்பா ஹரிஜனின் உறவினர் என்பதால், எதிர் கோஷ்டி அவரை கொன்று இருக்கலாம் என்ற கோணத்தில், விசாரணை நடந்தது.
ரவியை கொன்றதாக கூலிப்படையின் துளசிராம் ஹரிஜன், 40, அலெக்ஸ், 35, சண்முக், 37, பிரகாஷ், 29, முருகேஷ், 34, ஆகியோர், நேற்று கைது செய்யப்பட்டனர்.
துளசிராமுக்கும், ரவிக்கும் முன்விரோதம் இருந்தது. துளசிராமை கொலை செய்ய ரவி திட்டம் தீட்டினார். இது பற்றி அறிந்த அவர், கூட்டாளிகளுடன் சேர்ந்து ரவியை கொன்றது தெரியவந்தது.