உங்கள் வீட்டை சரி செய்து கொள்ளுங்கள்! குமாரசாமிக்கு துணை முதல்வர் யோசனை
உங்கள் வீட்டை சரி செய்து கொள்ளுங்கள்! குமாரசாமிக்கு துணை முதல்வர் யோசனை
ADDED : மே 10, 2024 11:00 PM

பெங்களூரு: ''உலகத்தின் தவறை நீங்கள் எப்படி திருத்துவீர்கள்? முதலில் உங்கள் வீட்டை சரி செய்து கொள்ளுங்கள்,'' என, ம.ஜ.த., தலைவர் குமாரசாமியை துணை முதல்வர் சிவகுமார் அறிவுறுத்தினார்.
பசவ ஜெயந்தியை முன்னிட்டு, பெங்களூரின் விதான்சவுதா வளாகத்தில் உள்ள பசவண்ணரின் உருவப்படத்துக்கு, துணை முதல்வர் சிவகுமார் மலர் துாவி வணங்கினார். பின் அவர் கூறியதாவது:
முன்னாள் முதல்வர் குமாரசாமி உட்பட ம.ஜ.த., தலைவர்கள், கவர்னரை சந்தித்து 'பென் டிரைவ்' வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்கும்படி வலியுறுத்துகின்றனர். பசவண்ணர் ஜெயந்தியன்று பென்டிரைவ் குறித்து விவாதிப்பது சரியல்ல. பசவண்ணர் என்ன கூறியுள்ளார்?
'உலகத்தின் குறைகளை நீங்கள் எப்படி திருத்துவீர்கள்? உங்களின் மனம், உடலை துாய்மைப்படுத்துங்கள். உங்கள் சுமையை மற்றவர் மீது ஏன் சுமத்துகிறீர்கள்; மற்றவரை பற்றி ஏன் பேசுகிறீர்கள்?' என, கூறியுள்ளார். நாமும் அதை பின்பற்றலாம். குமாரசாமி முதலில் தன் வீட்டை சரி செய்து கொள்ள வேண்டும்.
கவர்னரிடம் புகார் மனு அளித்துள்ள குமாரசாமிக்கு, நல்லது நடக்கட்டும். பென்டிரைவ் வழக்கில் பல நாட்களுக்கு பின், மகளிர் ஆணையம் பதில் அளித்துள்ளது. மகளிர் ஆணையம் அரசியல் பாகுபாடு பார்க்காமல் பணியாற்ற வேண்டும்.
முதன்முதலாக பார்லிமென்டை துவக்கியது பசவண்ணர். அதை அஸ்திவாரமாக கொண்டு, நாங்கள் நடந்து கொள்கிறோம். ஜாதி, மதம் பார்க்காமல் சமத்துவத்தை பசவண்ணர் பின்பற்றினார்.
எங்கள் அரசின் திட்டங்களும் கூட, சமத்துவமான சமூதாயத்தை உருவாக்க கூடியதாகும். பெண்களுக்கான திட்டங்களை செயல்படுத்தினோம். அனைத்து அலுவலகங்களில் பசவண்ணரின் உருவப்படத்தை வைத்து, பசவண்ணர் ஜெயந்தியை கொண்டாட வேண்டும் என, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.