கனமழையால் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு மணிப்பூரில் மூவர் பலி; 1,000 பேர் பாதிப்பு
கனமழையால் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு மணிப்பூரில் மூவர் பலி; 1,000 பேர் பாதிப்பு
ADDED : மே 30, 2024 11:46 PM

இம்பால்: மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கில், கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மழை தொடர்பான விபத்துகளில் மூவர் பலியாகினர்: 1,000க்கும் மேற்பட்டோர் கடும் பாதிப்படைந்துள்ளனர்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இம்பால் பள்ளத்தாக்கில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், நிலச்சரிவும் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.
மேற்கு இம்பால் மாவட்டத்தில் பாயும் நம்புல் ஆற்றில் நீர்வரத்து திடீரென அதிகரித்ததால், குமான் லம்பக், நகரம், சகோல்பான்ட், உரிபோக், கெய்சம்தோங்க், பாவ்னோ பகுதியில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. இதனால் கரையோர மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர்.
இதேபோல் இம்பால் ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், கிழக்கு இம்பால் மாவட்டத்தின் கெய்ராங், கபம், லைரியேன்பகம் லைகே பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் நீர் புகுந்தது. இதனால் மக்கள் வீட்டை காலி செய்து உடமைகளுடன் வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இதேபோல் சேனாபதி மாவட்டத்தில் பெய்த கனமழையால் தோங்லாங் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி, 34 வயது நபர் பலியானார். மூவர் நிலச்சரிவில் சிக்கி காயம் அடைந்தனர். மேலும் சேனாபதி ஆற்றில் பாய்ந்தோடிய வெள்ளத்தில் சிக்கி, 83 வயது மூதாட்டி உயிரிழந்தார். இம்பால் நகரில் மின்சாரம் தாக்கி, 75 வயது முதியவர் உயிரிழந்தார். மேலும் ஆயிரக்கணக்கானோர் மழையால் பாதிப்படைந்துள்ளனர்.
இதையடுத்து தேசிய பேரிடர் மீட்புப்படையினர் நேற்று முன்தினம் இரவில் இம்பாலுக்கு சிறப்பு விமானப்படை விமானத்தில் வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இம்பாலையும், சில்சாரையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டுள்ள பாலம், மழையால் திடீரென இடிந்து விழுந்தால் இப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மழை பாதிப்பு குறித்து முதல்வர் பைரேன் சிங் கூறியதாவது:
கனமழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட நபர்களை தேசிய பேரிடர் மீட்புப்படையினர், பாதுகாப்பு படையினர், தன்னார்வலர்கள் இணைந்து மீட்டு வருகின்றனர். அவர்கள் படகுகளில் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.