'சீட்' இல்லாவிட்டால் ஓட்டம்? பா.ஜ., யோகேஸ்வர் மறுப்பு!
'சீட்' இல்லாவிட்டால் ஓட்டம்? பா.ஜ., யோகேஸ்வர் மறுப்பு!
ADDED : செப் 03, 2024 10:36 PM

ராம்நகர் : ''சென்னபட்டணா இடைத்தேர்தலில் எனக்கு சீட் கிடைக்காவிட்டாலும், பா.ஜ.,வை விட்டு விலகமாட்டேன்,'' என, பா.ஜ., - எம்.எல்.சி., யோகேஸ்வர் தெரிவித்தார்.
சென்னபட்டணா இடைத்தேர்தல் தொடர்பாக, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக், எம்.எல்.சி., யோகேஸ்வர் ஆகியோர், புதுடில்லியில் கட்சி மேலிட தலைவர்களை சந்தித்து பேசினர்.
இந்நிலையில், ராம்நகரின் சென்னபட்டணாவில் நேற்று யோகேஸ்வர் அளித்த பேட்டி:
சென்னபட்டணா இடைத்தேர்தலில் ம.ஜ.த., சின்னத்தில் போட்டியிடவும் தயார் என்று கூறியிருந்தேன். ஆனால், நான் பா.ஜ., சின்னத்தில் நிற்க வேண்டும் என, எனது நல விரும்பிகள் கூறியுள்ளனர்.
ஆனாலும், எனது அரசியல் வாழ்க்கையில் பல ஏற்ற, இறக்கங்களை பார்த்துவிட்டேன். கட்சியுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர்கள் கருதுகின்றனர்.
இத்தொகுதியில் மத்திய அமைச்சர் குமாரசாமியே போட்டியிட்டாலும், அவருக்கு ஆதரவாக நானும், தொண்டர்களும் பிரசாரம் செய்வோம். தலைவர்கள் என்ன முடிவெடுத்தாலும், அதற்கு கட்டுப்படுவேன். எனக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதுவரை பொறுத்திருப்பேன்.
கட்சித் தலைவர்களும் என்னை அவசரப்பட்டு, கட்சியை விட்டு வெளியேற வேண்டாம் என்று கூறியுள்ளனர். கட்சியின் உத்தரவை மீறி நடக்கக் கூடாது என்று நினைக்கிறேன். இரு கட்சித் தலைவர்களும் ஒன்றாக தேர்தலை சந்திக்க வேண்டும். தொகுதி நிலவரம் குறித்து, மேலிடத்திடம் தெரிவித்துள்ளேன். இத்தொகுதிக்கு விரைவில் வேட்பாளரை முடிவு செய்தால் நன்றாக இருக்கும்.
இவ்வாறு அவர்கூறினார்.