கட்டாயம் நிறுத்துங்க!: காசா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு ஐ.நா கோபம்
கட்டாயம் நிறுத்துங்க!: காசா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு ஐ.நா கோபம்
UPDATED : மே 28, 2024 12:45 PM
ADDED : மே 28, 2024 12:03 PM

நியூயார்க்: ரபா நகரில் அமைந்துள்ள தற்காலிக முகாம்கள் மீது இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியதில், 45 பேர் உயிரிழந்தனர். இதற்கு, ஐ.நா பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே கடந்த எட்டு மாதங்களாக போர் நடந்து வருகிறது. நேற்று(மே 27) தெற்கு காசாவில் உள்ள ரபா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் குண்டு மழைகளை பொழிந்தது. இந்த திடீர் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 40 பேர் பலியாகினர்; 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இது தொடர்பாக ஐ.நா பொதுச் செயலாளர் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த கொடூர மோதலில் இருந்து தங்களை காத்துக் கொள்ளும் வகையில் தஞ்சம் புகுந்த அப்பாவி மக்களின் உயிரை பலி வாங்கிய இஸ்ரேலின் இந்த தாக்குதல் நடவடிக்கையை நான் கடுமையாக கண்டிக்கிறேன். காசாவில் பாதுகாப்பான இடம் ஏதும் இல்லை. இந்தக் கொடூரம் கட்டாயம் நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.