குஜராத் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த 24 முதலைகளை மீட்ட வனத்துறையினர்
குஜராத் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த 24 முதலைகளை மீட்ட வனத்துறையினர்
ADDED : செப் 02, 2024 01:18 AM
வதோதரா: குஜராத் மாநிலத்தின் வதோதரா பகுதியில், கடந்த மாதம் 27 முதல் 29ம் தேதி வரை கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள ஆஜ்வா அணை முழு கொள்ளளவை எட்டியது. அணையின் பாதுகாப்பை கருதி தண்ணீர் திறக்கப்பட்டதால், விஷ்வாமித்ரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக, கரையோரங்களில் உள்ள பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.
அப்போது ஆற்று நீரில் அடித்து வரப்பட்ட ஏராளமான முதலைகள், பாம்புகள், விஷ ஜந்துகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்தன. இதனால், அச்சமடைந்த அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மீட்புப் படையினருடன் இணைந்து வனத்துறையினரும் களமிறங்கி, வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட முதலைகள், பாம்புகள் உள்ளிட்டவற்றை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து வதோதரா வனச்சரக அதிகாரி கரன்சிங் ராஜ்புட் கூறுகையில், “விஷ்வாமித்ரி ஆற்றங்கரையை ஒட்டியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் மட்டும் 24 முதலைகள் உட்பட பாம்புகள், ஆமைகள் என 75 விலங்கு களை மீட்டுள்ளோம்.
''இதில், 2 அடி முதல் 14 அடி நீளம் வரையிலான முதலைகளை எங்கள் குழுவினர் மீட்டுள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இவ்வகை விலங்குகளால், மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதுதொடர்பான எந்த புகாரும் எங்களுக்கு வரவில்லை,” என்றார்.