ADDED : மே 24, 2024 06:19 AM

கலபுரகி: வேலை வாங்கி தருவதாக 40 பேரிடம் 1.50 கோடி ரூபாய் மோசடி செய்த, காங்கிரஸ் எம்.எல்.ஏ., அஜய்சிங்கின், முன்னாள் உதவியாளர் கைது செய்யப்பட்டார்.
கலபுரகி ஜுவர்கி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., அஜய்சிங். இவரது முன்னாள் உதவியாளர் பரசுராம் பாட்டீல், 40.
அஜய்சிங்கிடம் உதவியாளராக வேலை செய்த போது, எம்.எல்.ஏ.,விடம் சொல்லி அரசு வேலை வாங்கி தருவதாக, பீதர், கலபுரகி மாவட்டங்களை சேர்ந்த 40 பேரிடம் 1.50 கோடி ரூபாயை, வாங்கி இருந்தார்.
ஆனால் வேலை வாங்கி தராமலும், பணத்தை திரும்ப கொடுக்காமலும் மோசடி செய்தார்.
மொபைல் போனை 'சுவிட்ச் ஆப்' செய்து விட்டார். பரசுராம் பாட்டீலிடம் பணம் கொடுத்து மோசடிக்கு ஆளான, பீதரை சேர்ந்த கிரண் என்பவர், சமீபத்தில் ஜுவர்கி போலீசில் புகார் செய்தார். பரசுராம் பாட்டீலை போலீசார் தேடினர்.
இந்நிலையில் பெங்களூரில் ஒரு லாட்ஜில் தங்கி இருந்த, அவரை நேற்று முன்தினம் இரவு, ஜுவர்கி போலீசார் கைது செய்தனர். மொட்டை அடித்தும், மீசையை மழித்தும் ஆள் அடையாளமே தெரியாமல் இருந்தார். அவரை ஜுவர்கி அழைத்து சென்று, போலீசார் விசாரிக்கின்றனர்.