ADDED : ஆக 31, 2024 12:05 AM

ராஞ்சி: நில மோசடி வழக்கில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், அம்மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன், அமலாக்கத் துறையால் சமீபத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்ததையடுத்து, அந்த கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் சம்பாய் சோரன், 67, கடந்த பிப்ரவரி 2ம் தேதி முதல்வராக பதவியேற்றார்.
ஹேமந்த் சோரனுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியதைத் தொடர்ந்து, சம்பாய் சோரன், ஜூலை 3ல் தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த நாளே ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் மீண்டும் பொறுப்பேற்றார்.
இதற்கிடையே, முதல்வராக தான் பதவி வகித்த காலத்தில் நடந்த சில விஷயங்கள் தன்னை அவமதிக்கும் வகையில் இருந்ததாக சம்பாய் சோரன் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, டில்லி சென்ற சம்பாய் சோரன், பா.ஜ., மூத்த தலைவர்களை சந்தித்து பேசினார்.
இதன்பின், தன் அமைச்சர் பதவியையும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் இருந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்தும் சம்பாய் சோரன் நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், ராஞ்சியில் உள்ள பா.ஜ., அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தேர்தல் பொறுப்பாளரும், அசாம் முதல்வருமான ஹிமந்த பிஸ்வ சர்மா, மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் முன்னிலையில், சம்பாய் சோரன் நேற்று அதிகாரப்பூர்வமாக பா.ஜ.,வில் இணைந்தார்.