எம்.பி.,யாக பிரமாணம் ஏற்பதற்கு முன்பே பதவியை ராஜினாமா செய்த மாஜி முதல்வர்
எம்.பி.,யாக பிரமாணம் ஏற்பதற்கு முன்பே பதவியை ராஜினாமா செய்த மாஜி முதல்வர்
ADDED : மார் 31, 2024 05:00 AM

அரசியலில் அடிமட்ட தொண்டர்களாக இருப்பவர்களுக்கு, எம்.எல்.ஏ., அமைச்சர், முதல்வர், எம்.பி., மத்திய அமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதில் யாரும் விதிவிலக்கு அல்ல.
அதிசயம்
பதவி எப்போது கிடைக்கும். அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு, ஆட்டிப் படைக்கலாம் என்ற எதிர்பார்ப்புடன் காத்து இருப்பர். ஆனால் எம்.பி., ஆகியும், பதவி ஏற்காமல் அரசியல்வாதி ஒருவர், ராஜினாமா செய்த அதிசயம், கர்நாடகாவில் நடந்து உள்ளது.
கர்நாடகாவின் வட மாவட்டமான கலபுரகி காங்கிரஸ் கோட்டையாக இருந்தது. 1952 முதல் 2019 வரை கலபுரகி லோக்சபா தொகுதி 19 தேர்தல்களை சந்தித்துள்ளது.
இதில் காங்கிரஸ் 16 முறையும், பா.ஜ., 2 முறையும், ம.ஜ.த., ஒரு முறையும் வென்றுள்ளன. 1980ல் நடந்த தேர்தலில், கலபுரகி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தரம்சிங் வெற்றி பெற்றார். அதுவும் 1.17 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில். பார்லிமென்ட் சென்று எம்.பி., பதவி ஏற்க தயாராக இருந்தார்.
ஆனால் அப்போதைய பிரதமர் இந்திரா, தரம்சிங்கிடம் தொலைபேசியில் உரையாடி, எம்.பி., பதவியை ராஜினாமா செய்யும்படி கூறினார். இதற்கு, இந்திராவின் தீவிர ஆதரவாளர் ஸ்டீபன் தான் காரணம்.
கேரளாவை சேர்ந்த அவர், முன்னாள் பிரதமர் வாஜ்பாயை எதிர்த்து, டில்லி தொகுதியில் போட்டியிட்டு 5,045 ஓட்டுகளில் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
ஆனால் ஸ்டீபனை எம்.பி., ஆக்கி, மத்திய அமைச்சரவைக்குள் கொண்டு வர, இந்திரா விரும்பினார். அதற்கு அவர் தேர்வு செய்தது, கலபுரகி தொகுதி. இங்கிருந்து காங்கிரஸ் சார்பில் யார் போட்டியிட்டாலும், வெற்றி என்ன நிலை இருந்தது. இந்திரா கேட்டுக் கொண்டதால் தரம்சிங் எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். இடைத்தேர்தலில் ஸ்டீபனும் வெற்றி பெற்று, மத்திய அமைச்சரவையில் அமைச்சர் ஆனார்.
ஸ்டீபனுக்காக தொகுதியை விட்டுகொடுத்த தரம்சிங், பின்னர் அமைச்சர் பதவியை அலங்கரித்தார். 2004 சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி ஆட்சியில் முதல்வரும் ஆனார். ஆனால் கூட்டணியில் ஏற்பட்ட பிரச்னையால், ஒரு ஆண்டில் முதல்வர் பதவியை இழந்தார். அதன்பின்னர் 2009 லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று, பீதர் தொகுதி எம்.பி., ஆனார்.
பெருமை
கடந்த 2014 லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்த அவர், 2017ல் மரணமடைந்தார். பதவி கிடைக்காவிட்டால் கட்சியில் இருந்து விலகுவதாக, மிரட்டல் விடுக்கும் இந்த கால அரசியல்வாதிகள் மத்தியில், கட்சி மேலிடம் மீதான விசுவாசத்தால், எம்.பி., பதவியை ராஜினாமா செய்த, ஒரே தலைவர் என தரம்சிங்கை நினைத்து, அவரது ஆதரவாளர்கள் இன்றும் பெருமைப்படுகின்றனர்.
- நமது நிருபர் -

