போதை டிரைவரை மண்டியிட வைத்து தாக்கிய முன்னாள் முதல்வரின் மகள்
போதை டிரைவரை மண்டியிட வைத்து தாக்கிய முன்னாள் முதல்வரின் மகள்
ADDED : மார் 05, 2025 04:19 AM

குவஹாத்தி: அசாம் முன்னாள் முதல்வர் பிரபுல்ல குமார் மஹந்தாவின் மகள் பிரஜோயிதா காஷ்யப், தன் கார் டிரைவரை மண்டியிட வைத்து தாக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
வடகிழக்கு மாநிலமான அசாமில் 1985 - 1990 மற்றும் 1996 - 2001ம் ஆண்டில் முதல்வராக இருந்தவர் பிரபுல்ல குமார் மஹந்தா; அசாம் கன பரிஷத் கட்சியை சேர்ந்தவர். இவரது மகள் பிரஜோயிதா காஷ்யப். இவர், தன்னிடம் கார் டிரைவராக பணியாற்றும் நபரை மண்டியிட வைத்து, செருப்பால் தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
தலைநகர் திஷ்பூரில் பலத்த பாதுகாப்பு மிகுந்த சட்டசபை உறுப்பினர்கள் விடுதி வளாகத்தில், இந்த சம்பவம் நடந்துள்ளது.
இது குறித்து முன்னாள் முதல்வரின் மகள் காஷ்யப் கூறியதாவது: எங்கள் குடும்பத்தில் நீண்ட நாட்களாக கார் டிரைவராக பணியாற்றும் அந்த நபர் குடித்து விட்டு, என்னை பற்றி தவறான கருத்துகளை தெரிவித்து வந்தார். அவ்வாறு செய்யாதீர் என கூறியும், அவர் தொடர்ந்து மோசமான செயல்களில் ஈடுபட்டு வந்தார். தற்போது அத்துமீறி என் வீட்டு கதவை தட்டியதால் அவரை அடித்தேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
டிரைவர் குறித்து போலீசில் புகார் அளிக்காதது ஏன் என கேட்டதற்கு, காஷ்யப் நேரடியாக பதில் அளிக்கவில்லை. மேலும் தாக்குதலுக்கு உள்ளான டிரைவர், அரசு டிரைவரா, தனியாக குடும்பத்துக்கு என, நியமிக்கப்பட்ட டிரைவரா என்பதும் தெரியவில்லை.
பிரபுல்ல குமார் மஹந்தா தற்போது எம்.எல்.ஏ.,வாக இல்லாத நிலையில், அவரது குடும்பத்தினர் சட்டசபை விடுதியில் தங்கியது ஏன் எனவும் கேள்வி எழுந்து உள்ளது.