பெங்களூரு மாநகராட்சி தேர்தல் தாமதம் அரசு மீது 'மாஜி' மேயர்கள் அதிருப்தி
பெங்களூரு மாநகராட்சி தேர்தல் தாமதம் அரசு மீது 'மாஜி' மேயர்கள் அதிருப்தி
ADDED : செப் 14, 2024 08:09 AM
பெங்களூரு: பூங்கா நகர், ஐ.டி., - பி.டி., நகர் என்ற பிரசித்தி பெற்றுள்ள பெங்களூரை, மொத்த உலகமுமே வியப்புடன் பார்க்கிறது. ஆனால், மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல், சாலை பள்ளங்கள், வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட பிரச்னைகளால், நகருக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு மாநகராட்சியில், 2020 செப்டம்பர் 10ம் தேதியுடன், மக்கள் பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிந்தது. அப்போது தேர்தலை நடத்த விருப்பமில்லாத அன்றைய பா.ஜ., அரசு, பெங்களூரு மாநகராட்சிக்கு நிர்வாக அதிகாரியை நியமித்து, தேர்தலை தள்ளிவைத்தது.
அன்று முதல் இன்று வரை, மாநகராட்சியில் நான்கு ஆண்டுகளாக அதிகாரிகளின் தர்பார் தான் நடக்கிறது.
தடை உத்தரவு
பெங்களூரு மாநகராட்சி தேர்தலை நடத்த வேண்டும் என, சில முன்னாள் கவுன்சிலர்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். நீதிமன்றமும் தேர்தலை நடத்தும்படி அரசுக்கு உத்தரவிட்டது.
ஆனால் மாநில அரசு, வார்டுகள் மறு சீராய்வு செய்ய வேண்டும். இட ஒதுக்கீடு நிர்ணயிக்க வேண்டும் என, சாக்கு போக்கு கூறி உச்ச நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றது.
அதனால், முன்னாள் கவுன்சிலர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடி, மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தும்படி அரசுக்கு உத்தரவிட கோரினர். இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.
காங்கிரஸ் அரசு வந்த பின், பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தும் என, முன்னாள் கவுன்சிலர்கள் எதிர்பார்த்தனர். ஆனாலும் எந்த முன்னேற்றமும் இல்லை. துணை முதல்வர் சிவகுமார், மாநகராட்சிக்கு தேர்தல் நடத்துவதில் முதலில் ஆர்வம் காண்பித்தார்; நாளடைவில் இந்த ஆர்வம் காணாமல் போனது.
அதிகாரிகள் எங்கே?
தேர்தல் தாமதமாவதால், மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண, யாரும் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சாலை பள்ளங்கள், குடிநீர் பிரச்னை, குப்பை பிரச்னை என, பல பிரச்னைகளால் மக்கள் அவதிப்படுகின்றனர். புகார் அளிக்க அதிகாரிகளே கிடைப்பதில்லை.
முன்னாள் மேயர் காங்.,கின் பத்மாவதி கூறியதாவது:
மாநகராட்சியில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல், அதிகாரிகள் மனம் போனபடி நடந்து கொள்கின்றனர். சாக்கடை, தெரு விளக்கு, குப்பை, சாலை பள்ளங்கள் பிரச்னைகளை பற்றி கேட்போரே இல்லை.
கவுன்சிலர்கள் பதவியில் இருந்திருந்தால், வீதியில் இறங்கி பணியாற்றுவர். இப்போது அதிகாரிகளுக்கு கடிவாளம் போடுவோரே இல்லை. மக்கள் பிரச்னைகளில் சிக்கித் தவிக்கின்றனர். பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் நடத்த வேண்டும். இல்லை என்றால், மாநகராட்சியை கலைக்கட்டும்.
இவ்வாறு கூறினார்.
முன்னாள் மேயர் பா.ஜ.,வின் சத்ய நாராயணா கூறியதாவது:
பா.ஜ., அரசு தேர்தலை தள்ளிவைக்க, முன்னுரை எழுதியது. அந்த வண்டியை காங்கிரசாரும் தள்ளிக் கொண்டு செல்கின்றனர். அதிகாரிகள் மக்களின் கைக்கு கிடைப்பதில்லை.
மாநில அரசே தலையிட்டு, சாலை பள்ளங்களை மூடும்படி உத்தரவிட வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களுக்கு பயமே இல்லை. அரசியல் சாசனத்தின் 74வது திருத்தத்தை ரத்து செய்துவிட்டு, எம்.எல்.ஏ.,க்களே மாநகராட்சி நிர்வாகத்தை நடத்திச் செல்லட்டும். அவர்களும் இதைத்தான் விரும்புகின்றனர்.
இவ்வாறு கூறினார்.
முன்னாள் மேயர் காங்.,கின் கங்காம்பிகா கூறியதாவது:
கவுன்சிலர்கள் இல்லாமல் பெங்களூரின் நிலை மோசமாக உள்ளது. அரசியல் சாசனத்தின்படி தேர்தல் நடத்த வேண்டும். ஆனால், சட்டத்தை பின்பற்ற யாரும் தயாராக இல்லை.
சட்டசபை, லோக்சபா தேர்தல்கள் எப்போதும் தாமதம் ஆவதில்லை. இந்த தேர்தல்கள் காலா காலத்துக்கு நடக்கின்றன. உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைப்பது சரியல்ல. அதிகாரிகளை தட்டிக் கேட்போர் இல்லாததால், அவர்கள் அலட்சியமாக நடந்து கொள்கின்றனர். மக்கள் பிரச்னைகளால் தவிக்கின்றனர்.
இவ்வாறு கூறினார்.