மத்திய அமைச்சரை சந்தித்த இன்னாள், முன்னாள் எம்.பி.,
மத்திய அமைச்சரை சந்தித்த இன்னாள், முன்னாள் எம்.பி.,
ADDED : ஜூன் 27, 2024 11:01 PM

மைசூரு: மைசூரு பா.ஜ.,வின் முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா, மத்திய ரயில்வே மற்றும் ஜல்சக்தி துறை இணை அமைச்சர் சோமண்ணாவை சந்தித்து, தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்து, ஆலோசனை நடத்தினார்.
மைசூரு எம்.பி.,யாக இருந்த பிரதாப் சிம்ஹா, தொகுதியில் பல வளர்ச்சி பணிகளை செய்திருந்தார். மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து, பல திட்டங்களை கொண்டு வந்தார். இம்முறை லோக்சபா தேர்தலில், அவருக்கு சீட் வழங்கப்படவிலலை.
தனக்கு சீட் கிடைக்கா விட்டாலும், பிரதாப் சிம்ஹாவுக்கு தொகுதி மீதான அக்கறை குறையவில்லை. மத்திய ரயில்வே மற்றும் ஜல்சக்தி துறை இணை அமைச்சர் சோமண்ணாவை, டில்லியில் நேற்று முன்தினம், பிரதாப் சிம்ஹா சந்தித்தார்.
தான் எம்.பி.,யாக இருந்த போது, அனுமதி கிடைத்து அடிக்கல் நாட்டப்பட்ட ரயில் திட்ட பணிகளை விரைவில் துவக்கவும், மைசூரு - மும்பை இடையிலான புதிய ரயில் போக்குவரத்தை துவக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
மைசூரின் இன்னாள் எம்.பி., யதுவீரும், மத்திய அமைச்சர் சோமண்ணாவை சந்தித்து, ஆலோசனை நடத்தினார். இன்னாள், முன்னாள் எம்.பி.,க்கள், மத்திய இணை அமைச்சரை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில், எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

