'அட்லஸ் சைக்கிள்ஸ்' நிறுவன முன்னாள் தலைவர் தற்கொலை
'அட்லஸ் சைக்கிள்ஸ்' நிறுவன முன்னாள் தலைவர் தற்கொலை
ADDED : செப் 04, 2024 11:28 AM
புதுடில்லி : அட்லஸ் சைக்கிள்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சலீல் கபூர், டில்லியில் உள்ள வீட்டில் துப்பாக்கியால் சுட்டு நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
அட்லஸ் சைக்கிள்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவராக பதவி வகித்தவர் சலீல் கபூர், 70. இவர் டில்லியில் உள்ள ஏ.பி.ஜே., அப்துல்கலாம் மார்க் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.
நேற்றைய தினம் வீட்டில் இருந்த அவர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை நடத்தினர். அப்போது சலீல் தற்கொலை செய்தது தொடர்பான கடிதம் ஒன்றை கைப்பற்றினர்.
அதில், சிலர் அளித்து வந்த தொந்தரவு காரணமாக தற்கொலை முடிவெடுத்ததாக குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக கடந்த 2015ல், உத்தரகண்ட் போலீசார் சலீல் மீது, 13 கோடி ரூபாய் மோசடி செய்ததாக இரண்டு மோசடி வழக்கு பதிவு செய்திருந்தனர். அதில், 9 கோடி ரூபாய் மற்றும் 4 கோடி ரூபாய் என மொத்தம், 13 கோடி மோசடி செய்ததாக கைதான சலீல் மீது பாதிக்கப்பட்ட நபர்கள் குற்றம்சாட்டினர்.
அவர்களுக்கு பணத்தை திருப்பி தராததை அடுத்து, பணம் கேட்டு சிலர் தொந்தரவு செய்ததால் சலீல் தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது.