மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார்
மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார்
ADDED : ஆக 09, 2024 12:29 AM

கோல்கட்டா: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், மேற்கு வங்க முன்னாள் முதல்வருமான புத்ததேவ் பட்டாச்சார்யா, 80, நேற்று கோல்கட்டாவில் காலமானார். சமீப காலமாக வயது மூப்பு காரணமாக பொது நிகழ்ச்சி எதிலும் கலந்து கொள்ளாமல் அவர் தவிர்த்து வந்தார்.
பல்வேறு உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த அவர் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்த நிலையில் நேற்று காலமானார்.
மரணம் அடைந்த புத்ததேவ் பட்டாச்சார்யாவின் உடல், கோல்கட்டாவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில தலைமையகத்தில் இன்று பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
அவரது உடல் மருத்துவ ஆராய்ச்சிக்காக தானமாக வழங்கப்பட உள்ளதால், பொதுமக்கள் மரியாதைக்கு பிறகு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் என்று கட்சியின் மாநில செயலர் சலீம் தெரிவித்தார்.
கட்சியின் மூத்த தலைவர் ஜோதிபாசுவை தொடர்ந்து, மேற்கு வங்கத்தின் முதல்வராக 2000ல் புத்ததேவ் பொறுப்பேற்றார்.
தொடர்ந்து இரு முறை முதல்வராக பதவி வகித்த புத்ததேவ் தலைமையிலான இடதுசாரி கூட்டணி, 2011ல் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரசிடம் தோல்வியடைந்தது.
இதன் வாயிலாக 34 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த இடதுசாரி கூட்டணி ஆட்சி மேற்கு வங்கத்தில் முடிவுக்கு வந்தது. புத்ததேவ் மறைவுக்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்ப பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
புத்ததேவ் தன் ஆட்சியின் போது, தொழில்மயமாக்கலுக்கு முன்னுரிமை தந்தார். இதற்காக நந்திகிராம் பகுதியில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க, 14,500 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த மேற்கு வங்க அரசு முயற்சித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புத்ததேவ் அரசுக்கு எதிராக மாநிலம் முழுதும், 2007ல் பெரும் வன்முறை வெடித்தது.
அப்போது போலீசார் சுட்டதில், 14 பேர் கொல்லப்பட்டனர். இந்த வன்முறை சம்பவமே புத்ததேவ் அரசு வீழ்ச்சியடைய காரணமானது.
இதேபோல், ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சிங்கூர் பகுதியில் இவரது ஆட்சியின்போது, 'டாடா' நிறுவனம் நானோ கார் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க 997 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது. விவசாயிகளிடம் இருந்து பெரிய எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, நானோ தொழிற்சாலை திட்டத்தை கைவிட்ட டாடா நிறுவனம், அதை குஜராத்துக்கு மாற்றியது.