திருமண பந்தத்தின் அடித்தளம் சகிப்புத்தன்மை : உச்ச நீதிமன்றம்
திருமண பந்தத்தின் அடித்தளம் சகிப்புத்தன்மை : உச்ச நீதிமன்றம்
ADDED : மே 04, 2024 02:30 AM

புதுடில்லி, 'சகிப்புத் தன்மை, அனுசரிப்பு, பரஸ்பர மரியாதை ஆகியவை நல்ல திருமண பந்தத்தின் அடித்தளம்; அற்ப விஷயங்களை ஊதி பெரிதாக்கி, அந்த பந்தத்தை அழித்துவிடக் கூடாது' என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஹரியானாவைச் சேர்ந்த பெண் ஒருவர், வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தியதாக, கணவரிடம் இருந்து விவகாரத்து வழங்கவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
ஒரு நல்ல திருமணத்தின் அடித்தளமே சகிப்புத்தன்மை, அனுசரிப்பு மற்றும் ஒருவரையொருவர் மதித்தலே ஆகும். அதுவும் சகிப்புத் தன்மை என்பது இருவரின் உள்ளார்ந்ததாக இருக்க வேண்டும். சின்ன சின்ன சச்சரவுகள், அற்பமான கருத்து வேறுபாடுகள் போன்றவை குடும்ப வாழ்க்கையில் சாதாரணமானவை. அவற்றை பெரிதுபடுத்தக்கூடாது.
பெண்ணின் பெற்றோர், நெருங்கிய உறவினர்கள் சிறிய விஷயத்தையும், பெரிதாக பேசி நல்ல திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்து விடுகின்றனர். திருமண உறவு முடிந்துவிட்டால், தங்களுக்கு பிறந்த குழந்தைகள் என்ன ஆவர் என்பதை நினைத்துக் கூட பார்க்காமல் விஷமத்தனமாக கணவன் - மனைவி இருவரும் சண்டையிட்டு கொள்கின்றனர். விவாகரத்து என்ற ஒன்று குடும்ப உறவுக்கு வந்துவிட்டால், அதனால் பெரிதும் பாதிக்கப்படுவது குழந்தைகளே.
முழுப் பிரச்னையையும் நேர்த்தியாக கையாள்வதற்கு பதிலாக, குற்றவியல் நடவடிக்கைகளை துவங்குவது ஒருவர் ஒருவர் மீது வெறுப்பைத் தான் ஏற்படுத்தும். திருமண தகராறில் கடைசி முயற்சியாகவே போலீசாரை நாட வேண்டும். இந்த வழக்கில், கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதற்கான சாட்சியத்தில் தெளிவில்லை என்பதால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.