ADDED : ஆக 20, 2024 08:34 PM
நொய்டா:புதுடில்லி அருகே போலி மதுபான ஆலையைக் கண்டுபிடித்த போலீசார், நான்கு பேரை கைது செய்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநில சிறப்பு அதிரடிப் படையினர், நொய்டா அருகே சூரஜ்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன் தினம் அதிரடி சோதனை நடத்தினர். தொழில் மேம்பாட்டு ஆணைய சி பிளாக்கில் போலி மதுபான தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது. அதை நடத்தி வந்த நிகில் சோனி, அமித் யாதவ், கோவிந்த் சவுராசியா மற்றும் கமல் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து, பல்வேறு பிரபல நிறுவனங்களின் பெயரில் தயாரிக்கப்பட்டு இருந்த 54 பெட்டி மதுபானங்கள், 16 ஏ.டி.எம். கார்டுகள், பிரபல நிறுவனங்களின் ஹாலோ கிராம்கள், ஆல்கஹால், ஸ்பிரிட், ஆட்டோ மற்றும் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பல மாவட்டங்களில் மதுக்கடை விற்பனையாளர்கள் வாயிலாக குறைந்த விலையில் போலி மதுபானங்களை விற்பனை செய்வதை நான்கு பேரும் ஒப்புக் கொண்டனர்.
இதுகுறித்து, சிறப்புப் படையின் நொய்டா எஸ்.பி., ராஜ்குமார் மிஸ்ரா கூறுகையில், “கான்பூரைச் சேர்ந்த நான்கு பேரும் இதற்கு முன் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் போலி மதுபான தொழிற்சாலையை நடத்தி வந்துள்ளனர். ராம்பூர் மாவட்டத்தில் இருந்து 100 சதவீத ஆல்கஹால் மற்றும் ஸ்பிரிட் வாங்கிவந்து அதில் தண்ணீர், கலர் மற்றும் எசன்ஸ் ஆகியவற்றைக் கலந்து, பிரபல நிறுவனங்களின் பெயரில் மதுக்கடை ஊழியர்கள் வாயிலாக விற்று வந்துள்ளனர். நான்கு பேரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கிறது,”என்றார்.