ஏ.டி.எம்., மையங்களில் மோசடி; 2 பீஹாரி உட்பட மூவர் கைது
ஏ.டி.எம்., மையங்களில் மோசடி; 2 பீஹாரி உட்பட மூவர் கைது
ADDED : ஆக 08, 2024 11:48 PM
பெங்களூரு: ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க தெரியாதவர்களுக்கு, உதவுவது போல் நடித்து பண மோசடி செய்த, பீஹாரை சேர்ந்தவர்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு நகரில் உள்ள ஏ.டி.எம்., மையங்களில், பணம் எடுக்க தெரியாதவர்களுக்கு உதவி செய்வது போல் நடித்து, ஒரு கும்பல் பண மோசடியில் ஈடுபடுவது பற்றி, கடந்த சில மாதங்களாக, போலீஸ் நிலையங்களில் அடிக்கடி புகார்கள் பதிவாகின.
இந்நிலையில், பெங்களூரு சுப்பிரமணியபுரா போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலின்படி, பண மோசடியில் ஈடுபட்ட பீஹாரை சேர்ந்த விவேக்குமார், 28, சுனில்குமார், 24 ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் இருவரும் ஏ.டி.எம்., மையங்கள் முன்பு காத்து நிற்பர்.
ஏ.டி.எம்.,மிற்கு வந்து பணம் எடுக்க தெரியாமல் விழித்து கொண்டு நிற்பவர்களிடம், நைசாக பேச்சு கொடுப்பர். பணம் எடுத்து தர உதவுவதாக கூறி, ஏ.டி.எம்., கார்டின் ரகசிய குறியீடு எண்ணை பெற்று கொள்வர்.
பின், ஏ.டி.எம்., இயந்திரம் வேலை செய்யவில்லை என்று கூறுவர். பணம் எடுக்க கொடுத்தவர்கள் கொடுத்த, ஏ.டி.எம்., கார்டிற்கு பதில், தாங்கள் தயாரித்த போலி ஏ.டி.எம்., கார்டுகளை கொடுத்து அனுப்புவர். பின், ஒரிஜினல் ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி, பணம் எடுத்து மோசடி செய்தது தெரிந்தது. இவர்களிடம் இருந்து 37 ஏ.டி.எம்., கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேற்கண்ட பாணியில் பண மோசடியில் ஈடுபட்ட, திலீப், 35 என்பவரை, பேகூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 32 ஏ.டி.எம்., கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.