கடன் வாங்கி தருவதாக மோசடி தலைமறைவு பெண்ணுக்கு வலை
கடன் வாங்கி தருவதாக மோசடி தலைமறைவு பெண்ணுக்கு வலை
ADDED : செப் 09, 2024 04:32 AM

பெலகாவி : பெண்களுக்கு கடன் பெற்று தருவதாக கூறி, லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்த பெண் மீது, வழக்கு பதிவாகிஉள்ளது.
பெலகாவி நகரில் வசிப்பவர் பாக்யஸ்ரீ ஹுப்பள்ளிகர், 40. இவர் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து, கடன் வாங்கி தருவதாக நம்ப வைத்து, பணம் வசூலித்து மோசடி செய்துள்ளார்.
இவர் பெலகாவி, லோண்டா உட்பட பல்வேறு கிராமங்களில் பெண்களை அறிமுகம் செய்து கொண்டார். தனக்கு அரசியல் தலைவர்கள், உயர் அதிகாரிகளை தெரியும் என நாடகமாடினார்.
கர்நாடக வங்கியில், குறைந்த வட்டியில் கடன் வாங்கி கொடுப்பதாக ஆசை காண்பித்தார். இதற்கு கமிஷன் தர வேண்டியிருக்கும் என கூறி ஒவ்வொரு பெண்ணிடமும் 20,000 முதல் 25,000 ரூபாய் வரை வசூலித்தார்.
ஆனால், பெண்களுக்கு கடன் வாங்கி கொடுக்காமல், லட்சக்கணக்கான ரூபாயை சுருட்டி கொண்டு, கூட்டாளிகளுடன் தலைமறைவானார்.
அவரது மொபைல் போனும் 'சுவிட்ச் ஆப்' ஆகியுள்ளது. இவரிடம் ஏமாந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள், பெலகாவி மார்க்கெட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
போலீசாரும் பாக்யஸ்ரீ ஹுப்பள்ளிகர், அவரது கூட்டாளிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவான அவர்களை தேடுகின்றனர்.
போலீசார் கூறியதாவது:
ஏமாறுவோர் இருக்கும் வரை, ஏமாற்றுவோரும் இருக்க தான் செய்வர். பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறைந்த வட்டியில் கடன் வாங்கி தருவதாக கூறினால், நம்ப கூடாது. நம்பினால் பணத்தை இழக்க வேண்டியிருக்கும்.
பெண்களை ஏமாற்றிவிட்டு தப்பியோடிய, பாக்யஸ்ரீ ஹுப்பள்ளிகர் மற்றும் அவரது கூட்டாளிகளை கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம். விரைவில் கைது செய்வோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.