ADDED : மே 05, 2024 11:54 PM

அடிலாபாத்: “மத்தியில் காங்., ஆட்சிக்கு வந்ததும் நாடு முழுதும் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்,” என, காங்., - எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.
தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 17 லோக்சபா தொகுதிகளுக்கு, வரும் 13ல் தேர்தல் நடக்கிறது.
அடிலாபாத் தனித்தொகுதிக்கு உட்பட்ட நிர்மல் என்ற இடத்தில், நேற்று நடந்த காங்., பொதுக்கூட்டத்தில் அக்கட்சி எம்.பி., ராகுல் பேசியதாவது:
பா.ஜ., கூட்டணி, அரசியலமைப்பை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறது. இக்கூட்டணியிடம் இருந்து ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் பாதுகாக்க காங்., மற்றும் 'இண்டியா' கூட்டணியினர் போராடி வருகின்றனர்.
மோடி இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர். அவர், மக்களிடம் இருந்து இட ஒதுக்கீட்டைப் பறிக்க விரும்புகிறார். 50 சதவீதத்தில் இருந்து இட ஒதுக்கீட்டை அதிகரிப்பது தான், நாட்டின் முன் உள்ள மிகப்பெரிய பிரச்னை.
மத்தியில் காங்., ஆட்சிக்கு வந்ததும், இட ஒதுக்கீட்டுக்கான உச்ச வரம்பு நீக்கப்படும். மேலும் பொதுத் துறை நிறுவனங்களில் ஒப்பந்த முறை நீக்கப்பட்டு நிரந்தர வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.
வெறும் 25 பேரின், 16 லட்சம் கோடி ரூபாய் கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்துள்ளார். ஆனால் விவசாயிகளின் கடன்களை அவர் தள்ளுபடி செய்யவில்லை. 70 கோடி இந்தியர்களிடம் இருக்க வேண்டிய பணம், 22 பேரிடம் உள்ளது. இதை காங்., மாற்றப் போகிறது.
தெலுங்கானாவில் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் அளிக்கப்படுகிறது. மத்தியில் காங்., ஆட்சிக்கு வந்ததும் இத்திட்டம் நாடு முழுதும் விரிவுபடுத்தப்படும். மேலும் ஒவ்வொரு ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் வங்கிக் கணக்கில் ஆண்டுதோறும் 1 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்யப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.