இலவச கல்வி, 200 யூனிட் மின்சாரம் கெஜ்ரிவாலின் 10 வாக்குறுதிகள்
இலவச கல்வி, 200 யூனிட் மின்சாரம் கெஜ்ரிவாலின் 10 வாக்குறுதிகள்
ADDED : மே 13, 2024 03:31 AM

புதுடில்லி : ''எதிர்க்கட்சிகளின் 'இண்டியா' கூட்டணி ஆட்சி அமைத்தால், அதில் ஆம் ஆத்மியும் இடம் பெறும். ஆட்சி அமைந்தவுடன், அனைவருக்கும் இலவச கல்வி, 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட, 10 வாக்குறுதிகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றுவோம்,'' என, டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.
லோக்சபாவுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. இன்று நான்காம் கட்ட ஓட்டுப் பதிவு நடக்க உள்ளது.
இடைக்கால ஜாமின்
டில்லி மதுபான ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, தேர்தல் பிரசாரம் செய்வதற்காக இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. தன் அலுவலகத்தில் நேற்று அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
இந்த தேர்தல், பிரதமர் மோடியின் உறுதிமொழி கள் மற்றும் கெஜ்ரிவாலின் வாக்குறுதிகளுக்கு இடையேயானதாக இருக்கும். மோடியின் உறுதிமொழிகள் எப்போதும் நிறைவேற்றப்படாது. ஆனால், கெஜ்ரிவாலின் வாக்குறுதிகள் முழுதும் நிறைவேற்றப்படும்.
டில்லி மற்றும் பஞ்சாபில் நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தால், அதில் ஆம் ஆத்மியும் நிச்சயம் இடம் பெறும்.
இந்த, 10 வாக்குறுதிகள் குறித்து, கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் நான் ஆலோசிக்கவில்லை. ஆனால், அவர்கள் இவற்றை ஏற்பர் என்று நம்புகிறோம். அவற்றை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
இந்த, 10 வாக்குறுதிகளில் முதலாவது, நாடு முழுதும் 24 மணி நேரமும் அனைவருக்கும் மின்சார வசதி அளிக்கப்படும். நம் நாட்டில், 3 லட்சம் மெகாவாட் மின் உற்பத்திக்கான திறன் உள்ளது.
ஆனால், 2 லட்சம் மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. முழு கொள்ளளவை எட்டினால், நம்மிடம் உபரி மின்சாரம் இருக்கும்.
ரூ.1.25 லட்சம் கோடி
அனைத்து ஏழை மக்களுக்கும், 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். இதற்காக, 1.25 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும்; அதற்கு ஏற்பாடு செய்யப்படும்.
இரண்டாவதாக, அனைத்து அரசு பள்ளிகளும் மேம்படுத்தப்படும். இதற்கு, 5 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும். இதில் பாதியை மாநிலங்களும், மீதி பாதியை மத்திய அரசும் செலவிடும். அனைவருக்கும் இலவச கல்வி வழங்கப்படும்.
அனைத்து அரசு மருத்துவமனைகளும், 5 லட்சம் கோடி ரூபாய் செலவில் சிறப்பான தரத்துடன் மேம்படுத்தப்படும். மாவட்ட மருத்துவமனைகள், பல்நோக்கு மருத்துவமனைகளாக மாற்றப்படும். நாட்டில் பிறந்த அனைவருக்கும் இலவச மருத்துவ வசதி அளிக்கப்படும்.
அடுத்தது, நாட்டின் நலன் சார்ந்தது. அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள நம் நிலப்பரப்புகள் மீட்கப்படும். துாதரக உறவு வாயிலாக இந்த முயற்சி நடக்கும். தேவைப்பட்டால், நம் ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளித்து மீட்கப்படும்.
இளைஞர்களை ஏமாற்றும் அக்னிவீர் திட்டம் கைவிடப்படும். விவசாயிகளுக்கு எம்.எஸ்.பி., எனப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும். டில்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.
பிரதமர் மோடி அடுத்தாண்டில் ஓய்வு பெற்றுவிடுவார். அவருக்குப் பின், அவர் அளித்த உத்தரவாதங்களை நிறைவேற்றுவது யார் என்ற கேள்விக்கு தெளிவான பதில் வரவில்லை.
ஆனால், நான் தொடர்ந்து இருப்பேன். அதனால், என் வாக்குறுதிகளை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்வேன். இண்டியா கூட்டணி வென்றால், பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் இருக்க மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.