ADDED : மே 01, 2024 02:05 AM
உத்தரகன்னடா, கர்நாடக மாநிலத்தில், 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இவற்றில், 14 தொகுதிகளுக்கு ஏப்., 26ல் முதல் கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது. அடுத்த கட்டமாக, வரும் 7ம் தேதி மீதமுள்ள 14 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. இதற்கான பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது.
இங்குள்ள உத்தரகன்னடா லோக்சபா தொகுதியில், ஓட்டு சதவீதத்தை அதிகரிப்பதில், முஸ்லிம் அமைப்புகள் ஆர்வம் காண்பிக்கின்றன. இதற்கான முயற்சியில் ஈடுபட்டு உள்ளன.
இதன்படி, பணி நிமித்தமாக அரபு நாடுகளுக்கு சென்று, அங்கிருந்து ஓட்டு போட உத்தர கன்னடாவின் பட்கல் பகுதிக்கு வரும் மக்களுக்கு, இலவச விமான டிக்கெட் வழங்குவதாக அறிவித்துள்ளன. இதுகுறித்து, சவுதி அரேபியாவில் உள்ள பட்கல் முஸ்லிம் அமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் ரியாத், தமாம், ஜெட்டாவில் பட்கலின் 1,250 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கு, இலவச விமான டிக்கெட் எடுத்துக் கொடுக்க, இந்த அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.
'அரபு நாடுகளில் வசிக்கும் வாக்காளர்கள், சொந்த ஊருக்கு வந்து ஓட்டு போடுங்கள். மதச்சார்பற்ற வேட்பாளர்கள், கட்சிகளுக்கு ஆதரவாக ஓட்டு போட வேண்டும்' என, முஸ்லிம் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.