ADDED : ஜூலை 08, 2024 01:35 AM

ஹைதராபாத் : தெலுங்கானாவில், அரசு பஸ்சில் பிறந்த பெண் குழந்தைக்கு, வாழ்நாள் முழுதும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, தலைநகர் ஹைதராபாதில் உள்ள முஷீராபாத் டிப்போவில் இருந்து, '1 இசட்' என்ற வழித்தட பஸ்சில் சமீபத்தில், நிறைமாத கர்ப்பிணியான ஸ்வேதா ரத்னம் என்பவர் ஏறினார்.
பகதுார்புராவை பஸ் அடைந்ததும், அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதை கவனித்த கண்டக்டர் சரோஜா, பஸ்சில் இருந்த மற்ற பெண் பயணியரை உதவிக்கு அழைத்தார். அவர்களின் உதவியுடன், ஸ்வேதாவுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது.
இதையறிந்த தெலுங்கானா மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் நிர்வாக இயக்குனர் வி.சி.சஜ்ஜனார், “அரசு பஸ்சில் பிறந்த பெண் குழந்தைக்கு, வாழ்நாள் முழுதும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்,” என அறிவித்தார்.
மேலும், பிரசவத்துக்கு உதவிய கண்டக்டர் சரோஜாவுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.