ADDED : ஜூன் 29, 2024 11:12 PM
தங்கவயல்: நண்பரின் 4.20 லட்ச ரூபாய் மதிப்புள்ள 70 கிராம் தங்க நகைகளை மறைத்து வைத்தவர் கைது செய்யப்பட்டார்.
தங்கவயல் மஸ்கம் பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் சேத்தன், நெல்சன். இவர்கள் மூன்று நாட்களுக்கு முன்பு, வெளியூரில் நடந்த திருமண விழாவுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தனர். அப்போது, சேத்தன் தன் மனைவியின் நகையை, பை ஒன்றில் வைத்திருந்தார். அந்த பையுடன் நெல்சனின் பையும் இருந்தது.
திருமணம் முடிந்த பின், இரு குடும்பத்தினரும் அவரவர் வீட்டுக்குச் சென்றனர். வீட்டுக்கு சென்ற பின்னர் தான், பை மாறி இருந்ததை சேத்தன் பார்த்துள்ளார். உடனடியாக நெல்சனை தொடர்பு கொண்டு, “நம் இருவர் பையும் மாறி உள்ளது. எனது பையை தாருங்கள்,” என்று கூறி உள்ளார்.
நெல்சனும், பையை கொண்டு வந்து கொடுத்துள்ளார். ஆனால் அதில் சேத்தன் வைத்திருந்த நகை இல்லை. இது பற்றி, நெல்சனிடம் கேட்டபோது, தனக்கு தெரியாது என்று அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து, ராபர்ட்சன்பேட்டை போலீஸ் நிலையத்தில் சேத்தன் புகார் செய்தார். இதன் பேரில் நெல்சனிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது, நகையை எடுத்து வைத்துள்ளதை நெல்சன் ஒப்புக்கொண்டார். அவர் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர். அவர் வைத்திருந்த 4.20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 70 கிராம் எடை உள்ள இரண்டு தங்க நெக்லஸ், ஒரு தங்கச் செயின் ஆகியவற்றை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
நெல்சனை, தங்கவயல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை நீதிபதி விசாரித்து, நெல்சனை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.