29 முதல் பீன்யா மேம்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி
29 முதல் பீன்யா மேம்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி
ADDED : ஜூலை 25, 2024 11:03 PM
பெங்களூரு,: பீன்யா மேம்பாலத்தில் வரும் 29ம் தேதி முதல் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பெங்களூரு துமகூரு ரோட்டில் பீன்யா அருகே கோரகுன்டேபாளையாவிலில் இருந்து, 'பார்லே ஜி' தொழிற்சாலை வரை 5 கி.மீ., துாரத்திற்கு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 டிசம்பரில் மேம்பாலத்தின் இரண்டு துாண்களுக்கு இடையிலான, கேபிள்களில் விரிசல் ஏற்பட்டிருப்பது தெரிந்தது.
இதனால் விரிசல்களை சரி செய்ய வேண்டியிருந்ததால், மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது
விரிசல் ஏற்பட்டிருந்த கேபிள்கள் உட்பட மேலும் சில கேபிள்களை மாற்றும் பணிகள் நடந்தன.
இந்நிலையில், கடந்த ஆண்டு மார்ச் முதல் மேம்பாலத்தில் இலகுரக வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் கனரக வாகனங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன், மேம்பாலத்தில் தேசிய நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான லாரிகளை இயக்கி சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்ததால், மேம்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி வழங்குவது குறித்து, தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து, வரும் 29ம் தேதி முதல் மேம்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்வதற்கு, தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அனுமதி வழங்கி உள்ளனர்.
மேம்பாலத்தில் செல்லும் கனரக வாகனங்கள் இடது பக்கமாக செல்ல வேண்டும். மணிக்கு 40 கி.மீ., வேகத்தில் செல்ல வேண்டுமென்றும், பெங்களூரு போக்குவரத்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
மேம்பால பராமரிப்பு பணிக்காக ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை காலை 6:00 மணி முதல் சனிக்கிழமை காலை 6:00 மணி வரை, அனைத்து வகையான வாகனங்களுக்கும் மேம்பாலத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

