பா.ஜ.,வில் 'சீட்' தராததால் விரக்தி கரடி சங்கண்ணா காங்.,கில் ஐக்கியம்
பா.ஜ.,வில் 'சீட்' தராததால் விரக்தி கரடி சங்கண்ணா காங்.,கில் ஐக்கியம்
ADDED : ஏப் 18, 2024 04:23 AM

பெங்களூரு : பா.ஜ.,வில் இருந்து விலகிய கரடி சங்கண்ணா, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் முன்னிலையில் நேற்று காங்கிரசில் இணைந்தார்.
கொப்பால் பா.ஜ., - எம்.பி.,யாக இருந்தவர் கரடி சங்கண்ணா, 73. லோக்சபா தேர்தலில் போட்டியிட 'சீட்' எதிர்பார்த்தார். டாக்டரான பசவராஜ் கியாவடருக்கு, பா.ஜ., மேலிடம் சீட் கொடுத்தது. இதனால் கரடி சங்கண்ணா அதிருப்தி அடைந்தார்.
அவரை மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா சமாதானப்படுத்தினார். சரியான நேரத்தில் உரிய பொறுப்பு கிடைக்கும் என்றார். ஆனாலும் கரடி சங்கண்ணாவின் ஆதரவாளர்கள் அவரை, காங்கிரசில் இணையும்படி வற்புறுத்தினர். இதனால் காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சு நடத்தினார்.
ராஜினாமா
கடந்த 15ம் தேதி கொப்பாலுக்கு சென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ., லட்சுமண் சவதி, கரடி சங்கண்ணா வீட்டிற்கு சென்று, ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை எம்.பி., பதவியை, கரடி சங்கண்ணா ராஜினாமா செய்தார்.
பா.ஜ.,வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகினார். இதையடுத்து நேற்று காலை பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், எம்.எல்.ஏ., லட்சுமண் சவதி முன்னிலையில், கரடி சங்கண்ணா காங்கிரசில் இணைந்தார்.
பழைய நட்பு
பின்னர் கரடி சங்கண்ணா பேசியதாவது:
முதல்வர் சித்தராமையாவுடன் இணைந்து, ஏற்கனவே பணியாற்றி உள்ளேன். 1994 சட்டசபை தேர்தலில், கொப்பாலில் இருந்து நானும், சாத்தனுாரில் இருந்து துணை முதல்வர் சிவகுமாரும், சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றோம். அப்போது இருந்தே எங்களுக்குள் நட்பு உள்ளது. அரசியலில் அடிமட்டத்தில் இருந்து படிப்படியாக முன்னேறி உள்ளேன்.
எனது அரசியல் குருவாக எச்.ஜி., ராமுலு உள்ளார். லட்சுமண் சவதியுடன் எனக்கு பல ஆண்டுகள் நட்பு உள்ளது. 2011ல் என்னை பா.ஜ.,வுக்கு அழைத்து சென்றவர் அவர் தான்.
இப்போது என்னை காங்கிரசுக்கு அழைத்து வந்திருப்பவரும் அவர் தான். எல்லாம் கால மாற்றம். கொப்பால் காங்கிரஸ் வேட்பாளர் ராஜசேகர பசவராஜ் ஹிட்னாலை, வெற்றி பெற வைக்க வேண்டியது எனது பொறுப்பு.
இவ்வாறு அவர் பேசினார்.

