15 ஆண்டு பழைய வாகனங்களுக்கு மார்ச் 31 வரை மட்டுமே எரிபொருள்
15 ஆண்டு பழைய வாகனங்களுக்கு மார்ச் 31 வரை மட்டுமே எரிபொருள்
ADDED : மார் 02, 2025 03:44 AM

புதுடில்லி: காற்று மாசை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், 15 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு, மார்ச் 31ம் தேதிக்கு பின், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எந்தவிதமான எரிபொருளும் நிரப்பப்பட மாட்டாது என, டில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மன்ஜிந்தர் சிங் சிர்சா அறிவித்துள்ளார்.
உலக அளவில் மிகவும் மோசமான காற்று மாசு உள்ள நகரங்களில், டில்லி இரண்டாம் இடத்தில் உள்ளது. டில்லியில் காற்றின் தரம் மிக மோசமான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், டில்லி முதல்வராக பா.ஜ.,வின் ரேகா குப்தா பொறுப்பேற்ற நிலையில், காற்று மாசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார்.
இதற்கிடையே டில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மன்ஜிந்தர் சிங் சிர்சா, துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதன்பின் அவர் கூறியதாவது:
டில்லியில் நிலவும் காற்று மாசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, பழைய வாகனங்களின் பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, 15 ஆண்டுகளுக்கும் மேலான பழைய வாகனங்களுக்கு, வரும் 31ம் தேதிக்கு பின் எரிபொருள் நிரப்பப்படாது. இதற்காக, அனைத்து எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும் பழமையான வாகனங்களை கண்டறியக்கூடிய சாதனத்தை நிறுவி கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, டில்லியில் காற்று மாசின் தரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
டில்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், ஹோட்டல்கள், வணிக வளாகங்களிலும் காற்று மாசை குறைக்கும் வகையில் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் இயந்திரங்களை அதிகளவு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டில்லியில் தற்போது பொது போக்குவரத்துக்கு சி.என்.ஜி., பஸ்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் அவற்றை அகற்றிவிட்டு, அதற்கு மாற்றாக மின்சார பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.