போலீஸ் வாகனத்தில் விநாயகர் சிலை: உணர்வுடன் விளையாடுவதாக பா.ஜ., கண்டிப்பு
போலீஸ் வாகனத்தில் விநாயகர் சிலை: உணர்வுடன் விளையாடுவதாக பா.ஜ., கண்டிப்பு
ADDED : செப் 14, 2024 11:48 PM

பெங்களூரு : நாகமங்களாவில் நடந்த கலவரத்தை கண்டித்து, பெங்களூரில் பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர். அவர்கள் வைத்திருந்த விநாயகர் சிலைகளை பறிமுதல் செய்து போலீஸ் வாகனத்தில் போலீசார் கொண்டு சென்றனர். இதை ஹிந்து அமைப்பினர் கண்டித்துள்ளனர்.
மாண்டியா மாவட்டம், நாகமங்களாவில் சில நாட்களுக்கு முன்பு விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நடந்தது. அப்போது கலவரம் வெடித்தது. இதை கண்டித்து பெங்களூரின், டவுன் ஹால் முன் பா.ஜ., உட்பட ஹிந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது விநாயகர் சிலையையும் வைத்திருந்தனர்.
போராட்டத்தை கட்டுப்படுத்திய போலீசார், ஹிந்து அமைப்பினரை கலைத்தனர். அங்கிருந்த விநாயகர் சிலையை என்ன செய்வது என, தெரியாமல் குழம்பிய அவர்கள், போலீஸ் வாகனத்தின் இருக்கையில் அமர்த்தினர்.
கைதியை போன்று விநாயகர் சிலை, போலீஸ் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட படம், தற்போது சமூக வலைதளத்தில் பரவியுள்ளது. போலீசாரின் செயலை, பா.ஜ., கண்டித்துள்ளது.
இதுகுறித்து, நேற்று மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா அளித்த பேட்டி:
விநாயகர் உற்சவம், ஹிந்துக்களின் கலாசார பண்டிகை. சிறுவர் முதல் முதியவர் வரை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடுவர். ஹிந்துக்களின் தார்மீக வழிபாடுகளில், முழு முதற்கடவுளான விநாயகருக்கு முதலில் பூஜை நடத்தப்படும்.
மக்களின் உணர்வுகள், சட்டம் - ஒழுங்கை பாதிக்கக் கூடாது என்பது, ஒப்புக்கொள்ள கூடியது என்றாலும், தேவையற்ற விதிகளை வகுத்து, பண்டிகை கொண்டாடும் சுதந்திரத்தை பறிப்பதை ஏற்க முடியாது.
காங்கிரஸ் அரசின் நெறிமுறைகள், உள்நோக்கம் கொண்டதாகும். இதற்கு நாகமங்களாவில் நடந்த சம்பவங்களே சாட்சி. அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்களுடன், விநாயகர் சிலையையும் போலீஸ் வைத்திருப்பது, ஆன்மிக உணர்வுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
சூழ்நிலையை சாமர்த்தியமாக சமாளித்து, விநாயகர் சிலையின் புனிதத்தை காப்பாற்ற வேண்டிய போலீசார், அலட்சியத்துடன் நடந்து கொண்டனர். இதை நாங்கள் கண்டிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.