ADDED : ஆக 01, 2024 12:06 AM

'காபி நாடு' என்று அழைக்கப்படும் சிக்கமகளூரு மாவட்டத்தின் சிருங்கேரியில் இருந்து 30 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது கங்கா மூலா மலை. கடல் மட்டத்தில் இருந்து 1,460 அடி உயரம் கொண்டது.
மலை ஏறுபவர்களுக்கு சரியான இடம். செல்லும் வழியில் காபி தோட்டங்களை கண்டு ரசிக்கலாம். இப்பகுதி வராஹ பர்வதம் என்றும் அழைக்கப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையின் அரோலி - கங்கரிகல் மண்டலத்தின் ஒரு பகுதியாகும். இந்த மலை, குத்ரேமுக் தேசிய பூங்கா எல்லைக்குள் வருகிறது.
நேத்ராவதி, துங்கா, பத்ரா ஆகிய மூன்று ஆறுகள் இங்கிருந்து தான் உற்பத்தியாகின்றன. மலையின் வடகிழக்கு பகுதியில் இருந்து செல்லும் துங்கா ஆறு, சிருங்கேரி, தீர்த்தஹள்ளி, ஷிவமொகா கூட்லி வழியாக, 147 கி.மீ., ஓடுகிறது.
மலையின் கிழக்கில் தோன்றி, வடகிழக்காக பாய்ந்து பத்ராவதிக்குள் 178 கி.மீ., ஓடும் பத்ரா ஆறு, ஷிவமொகாவின் கூட்லி வழியாக சென்று பத்ராவுடன் இணைவதால், 'துங்கபத்ரா' என்று அழைக்கப்படுகிறது. மலையின் மேற்கு பகுதியில் இருந்து தோன்றும் நேத்ராவதி ஆறு, தர்மஸ்தலா, மங்களூரு வழியாக சென்று அரபிக்கடலில் கலக்கிறது.
மலையேற்றத்தின் போது, நீர்வீழ்ச்சிகள், நீரோடைகள், சில குகைகளில், பகவதி தேவி, வராக பெருமானுக்கு கோவில்கள் இருப்பதையும் நீங்கள் பார்க்கலாம். மனதை கொள்ளை கொள்ளும் காடுகள், 100க்கும் மேற்பட்ட பறவை இனங்கள், பசுமையான தோட்டங்கள் உள்ளன. இங்கு மலையேற்றம் செய்ய விரும்புபவர்கள், வனத்துறையிடம் முன்னதாகவே அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
எப்படி செல்வது?
இங்கு செல்பவர்கள் பெங்களூரில் இருந்து மங்களூரு சர்வதேச விமான நிலையம் செல்ல வேண்டும். அங்கிருந்து 160 கி.மீ., டாக்சியில் பயணித்து கங்கா மூலா செல்லலாம்.
கங்கா மூலாவுக்கு ரயிலில் செல்ல விரும்புபவர்கள், ஷிவமொகா ரயில் நிலையம் (90 கி.மீ.,) சென்று அங்கிருந்து பஸ், டாக்சியில் செல்லலாம்.
பஸ்சில் செல்பவர்களுக்கு சிருங்கேரிக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அங்கிருந்து பஸ், கேப்கள் மூலம் குத்ரேமுக் அருகில் உள்ள கங்கா மூலா மலையேற்றத்துக்கு செல்லலாம்.
மூன்று ஆறுகள் உற்பத்தியாகும் கங்கா மூலா மலை.
- நமது நிருபர் -