ADDED : ஜூன் 04, 2024 04:43 AM

பெங்களூரு ரூரல் சிவகங்கேயில் அமைந்துள்ளது கங்காதேஸ்வரா சுவாமி மற்றும் ஹொன்னாதேவி கோவில். இக்கோவில், 'தென்னகத்து காசி' என்று அழைக்கப்படுகிறது. காசியை விட இந்த ஸ்தலம் புனிதமானது என பக்தர்கள் நம்புகின்றனர்.
கடல் மட்டத்தில் இருந்து 2,640.03 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மலை மீது அமைந்துள்ள இந்த கோவிலை, தொலைவில் இருந்து பார்க்கும்போது, தாமரை மீது அமர்ந்திருப்பது போன்று தெரியும்.
கங்கை புனித நீரில் இருந்து இறைவனின் சிலை உருவானதாக நம்பப்படுவதால், 'கங்காதேஸ்வர சுவாமி' என அழைக்கப்படுகிறது. எனவே, இத்திருத்தலம், 'தென்னகத்து காசி' என்று அழைக்கப்படுகிறது. சைவ ஆகம வழிபாட்டு முறைப்படி தினமும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
அத்துடன், இம்மலையில் பல சுற்றுலா தலங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை, ஸ்ரீகங்காதேஸ்வர சுவாமி கோவில், ஹொன்னாதேவி (ஸ்வர்ணாம்பா தங்கத்தாய்), கமலா தீர்த்தம் (குளம்), பாதாள கங்கை, பாறையின் கீழ் தீர்த்தம், தீர்த்த துாண், சுடர் துாண் போன்ற இடங்களையும் பார்க்கலாம். இந்த இடம் ஹொய்சாலா வம்சம் மற்றும் கெம்பே கவுடா ஆட்சியின்போது, புனரமைக்கப்பட்டது.
நான்கு திசையில் இருந்தும் இந்த மலையை காணலாம். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு திசைகளில் இருந்து பார்க்கும்போது, முறையே ரிஷபம் (எருது), நாகம் (பாம்பு), லிங்கம், விநாயகர் வடிவங்களில் மலை காட்சி அளிக்கிறது.
திரேத யுகம்
இங்குள்ள 'வாக்கு விநாயகர்' விக்ரஹங்கம், ஸ்ரீராமர் அவதரித்த திரேத யுகம் காலத்தை சேர்ந்தது என்று நம்பப்படுகிறது. சுவாமியை, மனமுருகி வேண்டி கொண்டால் நினைத்தது நடக்கிறது. இதனால் பட்டே கல்லு / ஹரரே கணபதி எனும் 'வாக்கு கணபதி' என்று அழைக்கின்றனர்.
ஸ்ரீ சண்முகா
சஷ்டியின் போதும், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் சிறப்பு பிரசாதம் வழங்கப்படுகிறது. சண்முகா, ஆறுமுகங்கள், மயில் மீது அமர்ந்தபடி காட்சி அளிக்கிறார். சஷ்டியன்று இவரை வழிபட்டால், அறிவும், கல்வியும் கிடைக்கும்.
பாதாள கங்கை
பாறைகளின் உள்ளிருந்து நீர் வருவதால் இதை 'பாதாள கங்கை' என்று கூறுகின்றனர். அரக்கனை வதம் செய்த பின், ஹொன்னா தேவி, கோபத்தில் தாகத்தை தணிக்க, பாறையை பிளந்ததாகவும், இதனால் பாறையில் இருந்து தண்ணீர் வெளிப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. கோடைகாலத்தில் நீர்மட்டம் அதிகமாகவும், குளிர்காலத்தில் குறைவாகவும் இருக்கும் என்பது ஆச்சரியம்.
ஹொன்னாதேவி
அசுரர்களான ரக்த பீஜாசுரன், நிசும்பனை வதம் செய்வதற்காக, சிங்கத்தின் மீது அமர்ந்து, எட்டு கரங்களுடன் ஆதிபராசக்தி தோன்றினார் என்று நம்பப்படுகிறது.
பவுர்ணமி, அமாவாசை நாட்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. உக்ரமான தேவிக்கு, சங்கராச்சாரியார் எழுதிய ஸ்ரீசக்ரா, ஓம்காரத்தால் சாந்தமடைந்தார் என்று கூறப்படுகிறது.
உகாதிக்கு பின் சரியாக 15 நாட்களுக்கு பின், தேவியின் ரத உற்சவம் நடக்கும். இவ்விழாவில் பங்கேற்க, ஏராளமான பக்தர்கள் வருகை தருவர்.
வெண்ணெயாக மாறும் நெய்
சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும் நெய், வெண்ணெயாக மாறுகிறது. வேறு எங்கும் இத்தகைய அதிசயம் இல்லை. இந்த வெண்ணெயை சாப்பிட்டால் லட்சியங்கள் நிறைவேறும், அறிவு கிடைக்கும் என நம்புகின்றனர்.
எப்படி செல்வது
பெங்களூரில் 54 கி.மீ., தொலைவில் உள்ள இந்த கோவிலுக்கு, பஸ், டாக்சி, கார் மூலம் செல்லலாம்.
மேலும் விபரங்களுக்கு கோவில் அர்ச்சகர் ராஜு தீக் ஷித்தின் 93414 55773, 98452 14115 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.