ADDED : மே 22, 2024 10:31 PM

உடுப்பி: பழங்களுக்குள் மறைத்து வைத்து, கைதிக்கு கஞ்சா கொண்டு வந்த, நண்பர்கள் இருவர் மீது வழக்குப்பதிவாகி உள்ளது.
உடுப்பியை சேர்ந்தவர் பிரேம்நாத் என்கிற ரேவுநாத். கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, உடுப்பி ஹிரியடுக்கா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். நேற்று முன்தினம் பிரேம்நாத்தை பார்க்க, நண்பர்களான சுதீஷ், வருண் வந்தனர். அவர்கள் கையில் கொண்டு வந்த, கூடைப்பையில் பழங்கள், பிஸ்கட்டுகள் இருந்தன. பிரதான நுழைவுவாயிலில் இருக்கும் ஊழியர்களிடம், அந்த பையை ஒப்படைத்துவிட்டு சிறைக்குள் சென்று, பிரேம்நாத்தை இருவரும் பார்த்து சென்றனர்.
இதையடுத்து கூடைப்பையை உதவி ஜெயிலர், வார்டன் சோதனை செய்த போது, பழங்கள் மறைத்து வைத்து, கஞ்சா கொண்டு வந்தது தெரிந்தது. பிளாஸ்டிக் கவரில் 10 கிராம் முதல் 15 கிராம் எடையுள்ள, கஞ்சாவை கொண்டு வந்து உள்ளனர்.
கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. உதவி ஜெயிலர் அளித்த புகாரில், ஹிரியடுக்கா போலீசார் சுதீஷ், வருண் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

