ADDED : மார் 07, 2025 11:01 PM

பெங்களூரு நகர வளர்ச்சிக்கு சித்தராமையா...
மாநகராட்சி தேர்தலுக்காக முதல்வர் சலுகை
தேவனஹள்ளி வரை மெட்ரோ ரயில் நீட்டிப்பு
வர்த்துார், பெல்லந்துார் ஏரி சீரமைப்புக்கு ரூ.234 கோடி
'பிராண்ட் பெங்களூரு' உருவாக்க ரூ.1,800 கோடி
ரூ.8,916 கோடியில் 'டபுள் டெக்கர்' மேம்பாலம்
ரூ.40,000 கோடியில் சுரங்கப்பாதை சாலை திட்டம்
அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.7,000 கோடி
கர்நாடக முதல்வர் சித்தராமையா, சட்டசபையில் நேற்று 2025 - 26ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில், பெங்களூரு நகர வளர்ச்சிக்கு அவர் அறிவித்த திட்டங்கள் பற்றிய விபரம் வருமாறு:
மாநில பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும் பெங்களூரு நகரின் அடிப்படை வளர்ச்சிக்கு, ஆண்டுதோறும் 3,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த பட்ஜெட்டில் 7,000 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள, சிறப்பு அமைப்பு உருவாக்கப்படும்.
அரசு உத்தரவாதம்
பெங்களூரு நகரில் 40,000 கோடி ரூபாய் செலவில், வடக்கு - தெற்கு, கிழக்கு - மேற்கு என இரண்டு சுரங்க சாலைகள் அமைக்கப்படும். இதற்கு உதவியாக, அரசு சார்பில், 19,000 கோடி ரூபாய் உத்தரவாதம், பெங்களூரு மாநகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், 8,916 கோடி ரூபாயில், 40.50 கி.மீ., துாரத்துக்கு 'டபுள் டெக்கர்' மேம்பாலம் அமைக்கப்படும்.
கால்வாய்களை ஒட்டி உள்ள பகுதிகளை பயன்படுத்தி, 3,000 கோடி ரூபாய் செலவில், 300 கி.மீ., துாரத்துக்கு கூடுதல் சாலைகள் மேம்படுத்தப்படும்.
சுகாதார திட்டம்
நகரின் 460 கி.மீ., முக்கிய மற்றும் துணை சாலைகள், 660 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும்.
நகரில், 120 கி.மீ., அளவுக்கு மேம்பாலம் மற்றும் கிரேட் செப்பரேட்டர் அமைக்கப்படும்.
'பிராண்ட் பெங்களூரு' திட்டத்தின் கீழ், 1,800 கோடி ரூபாயில், 21 திட்டங்கள் அமல்படுத்தப்படும்.
அடுத்த மூன்று ஆண்டுகளில், 413 கோடி ரூபாயில், ஒருங்கிணைந்த சுகாதார திட்டம் அமல்படுத்தப்படும்.
'பயோகாஸ்' தயாரிப்பு
பருவ நிலை மாற்றம் காரணமாக, நகரில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த, முறையான பாதாள சாக்கடை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் மையங்கள் அமைக்க, பெங்களூரு மாநகராட்சி மற்றும் குடிநீர், வடிகால் வாரியத்துக்கு, 3,000 கோடி ரூபாய் வழங்கப்படும்.
சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் மையங்களில் உருவாகும் கழிவுகளை கொண்டு, பயோகாஸ் தயாரிக்க, தனியாருடன் இணைந்து புதிய திட்டம் உருவாக்கப்படும்.
நகரின் வெளிவட்ட சாலை திட்டத்தை, பெங்களூரு தொழில் வளையம் என்று பெயர் மாற்றி, 73 கி.மீ., துாரத்துக்கு, ஹட்கோ வங்கி நிதியுதவியுடன், 27,000 கோடி ரூபாயில் திட்டம் அமல்படுத்தப்படும். தனிக்குழு அமைத்து, நிலம் கையகப்படுத்தும் பணிகள் துவங்கப்படும்.
காவிரி குடிநீர்
தேவனஹள்ளி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படும்.
காவிரி குடிநீர் 6ம் கட்ட திட்டம் அமல்படுத்த, திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
பெங்களூரு மாநகராட்சி சார்பில், 'பிராண்ட் பெங்களூரு - பசுமை பெங்களூரு' திட்டங்களின் கீழ், 35 கோடி ரூபாயில், 14 ஏரிகள் மேம்படுத்தப்படுகின்றன.
வர்த்துார், பெல்லந்துார் ஏரிகளுக்கு புத்துயிர் வழங்கும் வகையில், 234 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் கணக்கு
பெங்களூரு மாநகராட்சிக்கு, 2020 முதல் இதுவரை தேர்தல் நடக்கவில்லை. வரும் ஆகஸ்ட்டில் தேர்தல் நடத்த அரசு தயாராக இருப்பதாக, உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் தெரிவித்தது.
இந்நிலையில், மாநகராட்சி தேர்தலை கருத்தில் கொண்டு, பெங்களூரு மக்களை ஈர்ப்பதற்காகவே அறிவிப்புகளை வாரி வழங்கி உள்ளதாக ஒரு அரசியல் விமர்சகர் தெரிவித்தார். ஆனால், அறிவித்த திட்டங்கள் எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்பதையும் பார்க்க வேண்டும்.