தனியார் கோவில்களுக்கு தாராள நிதி தணிக்கை அறிக்கையில் அம்பலம்
தனியார் கோவில்களுக்கு தாராள நிதி தணிக்கை அறிக்கையில் அம்பலம்
ADDED : ஆக 08, 2024 05:54 AM
பெங்களூரு: 'மாநில அரசு, நிதியுதவி வழங்கியதில் தனியார் கோவில்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. ஹிந்து அறநிலையத்துறை கோவில்களை அலட்சியம் செய்துள்ளது' என, மத்திய கணக்கு தணிக்கை அறிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த 2017 - 18 முதல், 2021 - 22 வரையிலான நிதியாண்டுகளில், கோவில்களுக்கு வழங்கப்பட்ட நிதியுதவி குறித்து, சி.ஏ.ஜி., தணிக்கை செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. கோவில்களுக்கு நிதி வழங்குவதில், விதிமுறைகள் மீறப்பட்டது விவரிக்கப்பட்டுள்ளது.
இந்த கால கட்டத்தில், மாநிலத்தில் காங்கிரஸ், ம.ஜ.த., - காங்கிரஸ் கூட்டணி மற்றும் பா.ஜ., தலைமையிலான அரசுகள் இருந்தன. கோவில்களுக்கு ஒதுக்கப்பட்ட 232.29 கோடி ரூபாய் நிதியில், தனியார் கோவில்களுக்கு 187.81 கோடி ரூபாயை அரசு வழங்கியது. ஹிந்து அறநிலையத் துறை கோவில்களுக்கு 44.48 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
தனியார் கோவில்களுக்கு, 81 சதவீதமும், அறநிலையத் துறை கோவில்களுக்கு 19 சதவீதம் கிடைத்துள்ளது.
மாநில அரசு பாரபட்சமாக நடந்திருப்பதை சுட்டி காண்பித்துள்ளது. கோலாரின் அறநிலையத் துறைக்கு உட்பட்ட 29 கோவில்கள் சீர் குலைந்துள்ளன.
இவற்றை பழுது பார்க்க நிதியுதவி தேவை என, கோவில் நிர்வாகங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இந்த கோவில்களுக்கு நிதி வழங்கவில்லை.
ஆனால் நிதியுதவி கேட்டு, வேண்டுகோள் விடுக்காத 2,836 கோவில்களுக்கு நிதியுதவி வழங்கியுள்ளது. இவற்றில் 2,264 கோவில்கள் தனியாருடையதாகும். தேவையான கோவில்களுக்கு நிதி வழங்காமல், அலட்சியம் காண்பித்துள்ளது.
அறநிலையத் துறை கோவில்களுக்கு, அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய், தனியார் கோவில்களுக்கு அதிகபட்சம் 25 லட்சம் ரூபாய், நிதியுதவி வழங்கலாம் என, 2010ல் அரசு விதிமுறை வகுத்தது. ஆனால் உடுப்பியின், உச்சிலா மஹாலட்சுமி கோவிலுக்கு 2019 முதல் 2021 வரை, 12.75 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுளது. தான் வகுத்து விதிமுறையை, தானே அரசு மீறியுள்ளது.
கோலார், சீனிவாசபுராவின் சனி பகவான் கோவிலுக்கு விதிகளை மீறி, 1.20 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இது போன்று மொத்தம் 79 கோவில்களுக்கு நிர்ணயித்ததை விட, பல மடங்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, கோவில்களின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கத்துக்கு, பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.