கீர் பவானி கோவில் யாத்திரை பாதுகாப்பு।டன் புறப்பட்ட பக்தர்கள்
கீர் பவானி கோவில் யாத்திரை பாதுகாப்பு।டன் புறப்பட்ட பக்தர்கள்
ADDED : ஜூன் 13, 2024 12:48 AM
நக்ரோடா, ஜம்மு - காஷ்மீரில் ஆண்டுதோறும் நடக்கும் கீர் பவானி திருவிழாவில் பங்கேற்பதற்காக, 5,000 காஷ்மீரி பண்டிட்களுடன், முதல் குழுவின் யாத்திரை நேற்று துவங்கியது.
ஜம்மு - காஷ்மீரின் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் மன்ஸ்காமில் உள்ள மாதா கீர் பவானி கோவில் உட்பட, அதைச் சுற்றியுள்ள ஐந்து ஹிந்து கோவில்களுக்கு யாத்திரை மேற்கொள்ளும் கீர் பவானி திருவிழா, நாளை நடக்க உள்ளது.
ஆண்டுதோறும் நடக்கும் இந்தத் திருவிழாவின்போது, மன்ஸ்காமில் உள்ள கீர் பவானி கோவில், கந்தர்பாலில் உள்ள துல்முலா, குப்வாராவில் உள்ள திக்கர், அனந்த்நாகில் உள்ள லோகித்புரா ஆஷ்முகம், குல்காமில் உள்ள மாதா திரிபரசுந்தரி தேவ்சர் ஆகிய கோவில்களில் விழாக்களில் நடக்கும். இந்த ஐந்து கோவில்களுக்கும் செல்வதற்கு, பக்தர்கள் அதிகளவில் குவிவர்.
இந்தாண்டு, 80,000 காஷ்மீரி பண்டிட்கள் இந்தத் திருவிழாவில் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, 5,000 காஷ்மீரி பண்டிட்கள் அடங்கிய முதல் குழுவின் பயணம் நேற்று துவங்கியது.
ஜம்முவுக்கு அருகில் உள்ள நாக்ரோவில் இருந்து, 176 பஸ்களில் இவர்கள் புறப்பட்டனர். இந்தத் திருவிழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த சில வாரங்களில், ஜம்மு - காஷ்மீரில் சில பயங்கரவாத சம்பவங்கள் நடந்துள்ளன. இதையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.