பெண் துாக்கிட்டு தற்கொலை; கணவர் குடும்பம் மீது புகார்
பெண் துாக்கிட்டு தற்கொலை; கணவர் குடும்பம் மீது புகார்
ADDED : ஆக 16, 2024 11:02 PM

தாவணகெரே : குடும்ப தகராறில், பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கொலை செய்ததாக கணவர் குடும்பத்தினர் மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
தாவணகெரே டவுன் விவேகானந்தா நகரில் வசிப்பவர் சிவமூர்த்தி, 38. இவரது முதல் மனைவி 12 ஆண்டுகளுக்கு முன், உடல்நலக் குறைவால் இறந்தார்.
மனைவி இறந்த பின், மூன்று பிள்ளைகளுடன் தனியாக வசித்தார். சுமலதா, 30 என்பவருடன், உறவினர்கள் 2வது திருமணம் செய்து வைத்தனர். மூன்று பிள்ளைகளையும் வளர்க்க வேண்டும் என்று, சுமலதா குழந்தை பெற்று கொள்ளவில்லை.
இந்நிலையில், சிவமூர்த்தியின் முதல் மனைவிக்கு பிறந்த மூன்று பிள்ளைகளும், சித்தியான சுமலதா தங்களை கொடுமைப்படுத்துகிறார் என்று, ஆறு மாதங்களுக்கு முன், தந்தையிடம் கூறி உள்ளனர். இதனால் சிவமூர்த்தி, சுமலதா இடையில் சண்டை ஏற்பட்டது. பின், இருவரும் பேசி கொள்ளாமல் இருந்தனர்.
கடந்த நான்கு நாட்களுக்கு முன், சிவமூர்த்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு, சுமலதா தனது வீட்டில் துாக்கில் பிணமாக தொங்கினார். முதற்கட்ட விசாரணையில், குடும்ப தகராறில் அவர் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது.
ஆனால், சிவமூர்த்தியின் குடும்பத்தினர் தான், சுமலதாவை அடித்து கொன்று துாக்கில் தொங்க விட்டதாக, சுமலதாவின் உறவினர்கள், வித்யாநகர் போலீசில் புகார் செய்துள்ளனர். விசாரணை நடக்கிறது.

