15 வினாடிகள் கொடுங்கள் போதும்: பா.ஜ., பிரமுகர் பேச்சால் சர்ச்சை
15 வினாடிகள் கொடுங்கள் போதும்: பா.ஜ., பிரமுகர் பேச்சால் சர்ச்சை
UPDATED : மே 10, 2024 06:55 AM
ADDED : மே 10, 2024 12:14 AM

புதுடில்லி, 'பதினைந்து நிமிடங்களுக்கு போலீசை அகற்றுங்கள்; எங்களால் என்ன செய்ய முடியும் என்பதை காட்டுகிறோம்' என, ஏ.ஐ.எம்.ஐ.எம்., மூத்த தலைவர் அக்பருதீன் ஓவைசி, 11 ஆண்டுகளுக்கு முன் பேசியதை குறிப்பிட்ட பா.ஜ.,வைச் சேர்ந்த நவ்னீத் ராணா, 'உங்களுக்கு 15 நிமிடம் தேவை; எங்களுக்கு 15 வினாடிகள் போதும்' என கூறியுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் லோக்சபா தொகுதியின் எம்.பி.,யாக, ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவர் அசாதுதீன் ஓவைசி, 2-004 முதல் இருந்து வருகிறார்.
பிரசார கூட்டம்
அதற்கு முன், 1984ல் இருந்து அவரது தந்தை அலாஹுதீன் ஓவைசி எம்.பி.,யாக இருந்தார். தற்போது இந்த தொகுதியில், அசாதுதீன் ஓவைசியை எதிர்த்து, பா.ஜ., சார்பில் மாதவி லதா போட்டியிடுகிறார்.
கடந்த 2013ல், அசாதுதீன் ஓவைசியின் தம்பி அக்பருதீன் ஓவைசி, ஒரு கூட்டத்தில் பேசினார். ஹிந்துக்களை குறி வைத்து, '15 நிமிடங்களுக்கு போலீஸ் இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள்; எங்களால் என்ன செய்ய முடியும் என்பதை காட்டுகிறோம்' என்று அவர் பேசியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஹைதராபாதில் நடந்த பிரசார கூட்டத்தில், பா.ஜ.,வின் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த நவ்னீத் ராணா பேசினார்.
முன்னாள் சுயேச்சை எம்.பி.,யான இவர் மிகவும் ஆக்ரோஷமாக பேசக் கூடியவர். தற்போதைய தேர்தலில் மஹாராஷ்டிராவில் அமராவதி தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிடுகிறார்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
சவால்
நவ்னீத் ராணா பேசியதாவது: 'எங்களுக்கு 15 நிமிடங்கள் கொடுங்கள்; எங்களால் என்ன செய்ய முடியும் என்று காட்டுகிறோம்' என்று ஓவைசியின் தம்பி முன்பு பேசினார். உங்களுக்காவது, 15 நிமிடங்கள் தேவை; எங்களுக்கு 15 வினாடிகள் போதும்.
ஏ.ஐ.எம்.ஐ.எம்., அல்லது காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டளிப்பது, பாகிஸ்தானுக்காக ஓட்டளிப்பதாக அமைந்துவிடும். பாகிஸ்தானின் அன்பும், ஆதரவும் இவர்களுக்கு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
மேலும், இந்த பேச்சு அடங்கிய வீடியோவை, சமூக வலைதளத்தில் நவ்னீத் ராணா பகிர்ந்துள்ளார். அதில், ஓவைசி சகோதரர்களையும் இணைத்துஉள்ளார்.
இது குறித்து, அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளதாவது:
ஏன், 15 வினாடிகள், ஒரு மணி நேரம் கூட எடுத்துக் கொள்ளுங்கள் என்று பிரதமர் மோடியிடம் கூறுகிறேன். உங்களால் என்ன செய்ய முடியும் என்பதை நாங்கள் பார்க்கிறோம்.
எங்கு வரவேண்டும் என்பதை கூறுங்கள். உங்களை யார் தடுக்கப் போகின்றனர். நாங்கள் எதற்கும் தயார். இது போன்ற பொது சவால் விடும்போது, அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.