கர்நாடகா வளர்ச்சிக்கு ரூ.62,793 கோடி தாருங்கள் 16வது நிடி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் கோரிக்கை
கர்நாடகா வளர்ச்சிக்கு ரூ.62,793 கோடி தாருங்கள் 16வது நிடி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் கோரிக்கை
ADDED : ஆக 29, 2024 11:00 PM

பெங்களூரு: ''பெங்களூரு வளர்ச்சிக்கு, 27,793 கோடி ரூபாயும்; கல்யாண கர்நாடகா மண்டல மேம்பாட்டுக்கு, 16வது நிதி கமிஷன் 25,000 கோடி ரூபாயும்; மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஏற்படும் பாதிப்பை தடுக்க, 10,000 கோடி ரூபாயும் வழங்கி உதவ வேண்டும். மாநிலம் வழங்கும் வரி பங்கில், 60 சதவீதம் சம்பந்தப்பட்ட மாநிலத்துக்கே திரும்பி வழங்கும்படி, கர்நாடக அரசு சிபாரிசு செய்கிறது,'' என முதல்வர் சித்தராமையா, 16வது நிடி ஆயோக் கூட்டத்தில் கோரினார்.
பெங்களூரு ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில், 16வது நிடி ஆயோக் தலைவர் அரவிந்த் பனகாரி உட்பட உயர் அதிகாரிகளுடன், முதல்வர் சித்தராமையா தலைமையிலான கர்நாடக குழு நேற்று முக்கிய ஆலோசனை நடத்தியது.
இதில், துணை முதல்வர் சிவகுமார், மூத்த அமைச்சர்கள், மாநில தலைமை செயலர் ஷாலினி ரஜ்னீஷ் உட்பட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், கர்நாடக அரசின் நிதி தொடர்பான கோரிக்கை அடங்கிய மனுவை, 16வது நிதி கமிஷன் தலைவர் அரவிந்த் பனகாரியிடம், முதல்வர் வழங்கினார்.
ரூ.4 லட்சம் கோடி
பின், சித்தராமையா பேசியதாவது:
நிதி பங்கீட்டில் மாநில அரசுகளுக்கு ஏற்றத்தாழ்வு இன்றி வழங்க ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம். வரி பங்கீடு செய்வதில் நேர்மை, செயல்திறன், மேலாண்மை ஆகியவற்றிற்கு இடையே சமநிலையை பராமரிக்க வேண்டும்.
இந்தியாவின் வளர்ச்சியில் கர்நாடகா முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில், 5 சதவீதமாக கர்நாடகா இருந்தாலும், தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கர்நாடகா 8.4 சதவீதம் பங்களிக்கிறது. இது நாட்டில், இரண்டாவது இடமாகும்.
ஒவ்வொரு ஆண்டும், நாட்டின் மொத்த வரி வருவாயில் கர்நாடகா 4 லட்சம் கோடி ரூபாய் பங்களிக்கிறது. ஆனால், மாநில வரி பங்காக 45,000 கோடி ரூபாயும்; மானியமாக 15,000 கோடி ரூபாய் மட்டுமே மத்திய அரசிடம் இருந்து கிடைக்கிறது.
அதாவது, ஒரு ரூபாயில், 15 பைசா மட்டுமே மாநிலத்துக்கு திரும்ப கிடைக்கிறது.
மாநிலத்துக்கான 15வது நிதி கமிஷனின் பங்கு குறைக்கப்பட்டதால், 2021 - 26 வரை 68,275 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ரூ.79,770 கோடி
இதையறிந்த 15வது நிதி கமிஷன், 11,495 கோடி ரூபாய் வழங்கும்படி, மத்திய அரசுக்கு சிபாரிசு செய்தது. இதை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.
இப்படி பல காரணங்களால், 15வது நிதி கமிஷன் காலத்தில், கர்நாடகாவுக்கு மொத்தம் 79,770 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களுக்கு, 35,000 கோடி ரூபாய் முதல் 40,000 கோடி ரூபாய் வரை வழங்கப்பட்டுள்ளது. வெவ்வேறு வரி வருவாயை, மத்திய அரசு சரியாக வழங்காததால், 2017 - 18 முதல் 2024 - 25 வரை 53,359 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வளவு நிதி இழப்பீட்டுக்கு இடையிலும், கர்நாடக அரசு, ஐந்து வாக்குறுதி திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
மத்திய அரசு நிதி வழங்காததால், மாநிலத்தின் வளர்ச்சி மீது எதிரொலித்துள்ளது.
குறிப்பிட்ட மாநிலத்தின் வருவாயை, அந்த மாநில வளர்ச்சிக்கு வழங்காமல், மற்ற மாநிலத்துக்கு வழங்குவதால் மக்கள் கவலையில் உள்ளனர்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், பெங்களூரு வளர்ச்சிக்கு, 55,586 கோடி ரூபாய் முதலீடு தேவை. இதில், 27,793 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கும்படி கோரிக்கை வைக்கிறோம்.
இதுபோன்று, கல்யாண கர்நாடகா மண்டல மேம்பாட்டுக்கு, 16வது நிதி கமிஷன் 25,000 கோடி ரூபாயும்; மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஏற்படும் பாதிப்பை தடுக்க, 10,000 கோடி ரூபாயும் வழங்கி உதவ வேண்டும்.
மேலும், மாநிலம் வழங்கும் வரி பங்கில், 60 சதவீதம் சம்பந்தப்பட்ட மாநிலத்துக்கே திரும்பி வழங்கும்படி, கர்நாடக அரசு சிபாரிசு செய்கிறது. வளமான இந்தியாவை உருவாக்க, வளமான கர்நாடகாவாக மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, கர்நாடக அரசு சார்பில், 16வது நிதி கமிஷன் குழுவுக்கு, மதிய விருந்து அளிக்கப்பட்டது.