ADDED : ஏப் 04, 2024 10:46 PM

சாம்ராஜ்நகர்- சாம்ராஜ் நகர் காங்கிரஸ் வேட்பாளர் சுனில் போஸுக்கு எதிராக, 'கோ பேக்' போஸ்டர்கள் நகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டு உள்ளன.
லோக்சபா தேர்தலில் சாம்ராஜ்நகர் - தனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக சுனில் போஸ் போட்டியிடுகிறார். இவர் அமைச்சர் மஹாதேவப்பாவின் மகன். சுனில் போஸ் மீது மணல் கடத்தல் வழக்கு இருந்தது. அந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் சாம்ராஜ்நகர் புவனேஸ்வரி சதுக்கம் உட்பட நகரின் முக்கிய பகுதிகளில், சுனில் போஸுக்கு எதிராக 'கோ பேக்' போஸ்டர்கள் நேற்று காலை ஒட்டப்பட்டு இருந்தன. அந்த சுவரொட்டியில், 'சுனில் போஸ் மணல் திருடன்' என்று கூறப்பட்டு இருந்தது. போலீசார் அந்த போஸ்டர்களை கிழித்து அகற்றினர்.
இதுகுறித்து சுனில் போஸ் கூறுகையில், ''எனக்கு எதிராக 'கோ பேக்' பிரசாரம் செய்ய, நான் என்ன வேறு மாவட்டத்துக்காரரா. சாம்ராஜ்நகர் மண்ணின் மகன்.
''நான் வெற்றி பெறுவேன் என்று பயத்தில், பா.ஜ.,வினர் எனக்கு எதிராக செயல்பட ஆரம்பித்து உள்ளனர். அவர்கள் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிப்பேன்.
''கர்நாடகாவில் பிரதமர் மோடி அலை இல்லை. இந்த முறை மாநிலத்தில் அதிக தொகுதிகளில், காங்கிரஸ் வெற்றி பெறும்,'' என்றார்.
