'சுற்றுலா பயணியர் வராததற்கு இட்லி - சாம்பார் தான் காரணம்' கோவா எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
'சுற்றுலா பயணியர் வராததற்கு இட்லி - சாம்பார் தான் காரணம்' கோவா எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
ADDED : பிப் 28, 2025 01:44 AM

பணஜி, ''கோவாவில் உள்ள கடற்கரை குடில்களில் இட்லி - சாம்பார் விற்கப்படுவதே, சர்வதேச சுற்றுலா பயணியர் எண்ணிக்கை குறைவுக்கு காரணம்,'' என, பா.ஜ., - எம்.எல்.ஏ., மைக்கேல் லோபோ குற்றஞ்சாட்டினார்.
கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கடற்கரை மாநிலமான கோவா, வருவாயில் சுற்றுலா துறையை பெரிதும் நம்பி இருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக, கோவாவுக்கு வரும் சர்வதேச சுற்றுலா பயணியர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இந்நிலையில், கலங்குட்டி தொகுதியின் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., மைக்கேல் லோபோ நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த இரு ஆண்டுகளாக கோவாவுக்கு வரும் சர்வதேச சுற்றுலா பயணியர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இதற்கு அரசை மட்டும் குறை கூறக்கூடாது. கடற்கரை குடில்களில், பெங்களூரைச் சேர்ந்த நபர்கள், 'வட பாவ்' விற்கின்றனர்.
சிலர், இட்லி - சாம்பார் விற்கின்றனர். மேற்கத்திய உணவுகள் விற்பனை செய்யப்படுவது குறைந்து விட்டது. சுற்றுலா பயணியர் எண்ணிக்கை குறைந்ததற்கு இதுவும் ஒரு காரணம். சுற்றுலா பயணியரின் எண்ணிக்கையை அதிகரிக்க, அனைத்து தரப்பினரும் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
ரஷ்யா - உக்ரைன் போரும், சுற்றுலா பயணியர் வருகை குறைந்ததற்கு ஒரு காரணம். சில ஆண்டுகளுக்கு முன் வரை, ரஷ்யாவிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணியர் கோவாவுக்கு வந்தனர். இப்போது அவர்கள் வருவது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.