ADDED : செப் 05, 2024 04:05 AM

பொதுவாக இயற்கையை ரசிக்காதவர்கள், விரும்பாதவர்கள் இருக்க முடியாது. இயற்கை வளம் நிறைந்த பகுதிகள் எங்குள்ளன என, தேடித்தேடி ரசிப்பர். விடுமுறை நாட்களில் இது போன்ற இடங்களுக்கு படையெடுப்பர். இயற்கை விரும்பிகளுக்கு பிடித்தமான இடங்களில், பிசிலே காட்டும் ஒன்றாகும்.
எங்கு பார்த்தாலும் பசுமையான காட்சிகள், மலைகள், குன்றுகள், தோட்டங்கள், வயல் வெளிகள் என, இயற்கையின் மறு வடிவமே பிசிலே காட். பல அற்புத அழகை தன்னுள்ளே, மறைத்து வைத்துள்ள பிசிலே காட், சுற்றுலா பயணியரை கை வீசி அழைக்கிறது. சாகச பிரியர்களுக்காகவே இறைவன் உருவாக்கிய இடம் என்றால் மிகை அல்ல.
இயற்கை ரசிப்பு
பெங்களூரு உட்பட, பல மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து தர்மஸ்தலா, குக்கே சுப்ரமண்யாவுக்கு வரும் சுற்றுலா பயணியர், தரிசனம் முடிந்து திரும்பும் போது, பிசிலே காட்டில் இறங்கி, இயற்கையை ரசிப்பது வழக்கம்.
ஹாசன், சக்லேஸ்புராவில் இருந்து, 55 கி.மீ., தொலைவில் பிசிலே காட் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள, குமார பர்வதா, புஷ்பகிரி மற்றும் தொட்டகிரி என, வரிசையாக மூன்று மலைகள் அடங்கிய அழகான சுற்றுலா தலம் பிசிலே காட். தேவலோகமே தரையிறங்கியதை போன்றுள்ளது.
அதிக மழை
இங்கு பிஸ்லே ரிசர்வ் காடு உள்ளது. இதில் பல்வேறு விதமான அற்புத மரங்கள், செடி, கொடிகள் உள்ளன. வெவ்வேறு விலங்குகள், பறவைகள் அடைக்கலம் பெற்றுள்ளன. வனத்தை சுற்றிலும் மலைகள், குன்றுகள் சூழப்பட்டதால் மிக அதிகமான மழை பெய்கிறது. மழைக்காலம் துவங்கிவிட்டால், பிசிலே காட்டுக்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரிக்கும்.
வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணியர் பெருமளவில் குவிவர். காலை 9:00 முதல் மாலை 6:30 வரை பிசிலே காட்டில், சுற்றுலா பயணியர் வருகை தர அனுமதி உள்ளது. 6 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு அனுமதி இலவசம். மற்றவர்கள் 20 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். டிக்கெட் பெற்று 'வியூ பாயின்டை' பார்த்து ரசிக்கலாம்.
முக்கிய நகரங்களில் இருந்து, சக்லேஸ்புராவுக்கு பஸ், ரயில் வசதி ஏராளம். தனியார் வாடகை வாகனங்களும் உள்ளன. சொந்த வாகனங்களிலும் வரலாம்.