ADDED : ஜூன் 24, 2024 05:11 AM
துமகூரு: போலீஸ் என கூறி பெண்ணிடம் 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க செயினை, 'ஆட்டை' போட்டு சென்ற இருவரை, போலீசார் தேடி வருகின்றனர்.
துமகூரு சிரா கடவிகெரே கிராமத்தை சேர்ந்தவர் அஸ்வதம்மா, 45. உடல் நலக்குறைவால் சிரா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உறவினரை பார்க்க, நேற்று காலை வந்தார். உறவினரை பார்த்து விட்டு, பஸ் ஏறுவதற்காக பஸ் நிலையத்திற்கு நடந்து சென்றார். அப்போது, போலீஸ் உடை அணிந்து எதிரே வந்த இருவர், அஸ்வதம்மாவிடம் பேச்சு கொடுத்தனர்.
'இந்த சாலையில் திருடர்கள் அதிகம். கண்ணிமைக்கும் நேரத்தில் தங்க செயினை பறித்து சென்று விடுவர். தங்க செயினை கழற்றி எங்களிடம் கொடுங்கள். ஒரு பேப்பரில் பத்திரமாக வைத்துக் கொடுக்கிறோம்' என்றனர்.
இதனை நம்பிய அஸ்வதம்மாவும் தங்க செயினை கழற்றி கொடுத்தார். போலீஸ் உடை அணிந்திருந்த இருவரும், அஸ்வதம்மா கையில் ஒரு பொட்டலத்தை கொடுத்து, 'இதற்குள் உங்கள் தங்க செயின் உள்ளது. வீட்டிற்கு சென்றதும் எடுத்துக் கொள்ளுங்கள்' என்றனர். அஸ்வதம்மா வீட்டுக்கு சென்று பார்த்த போது, பொட்டலத்துக்குள் ஒன்றுமே இல்லை.
போலீஸ்காரர்கள் என்று கூறி இருவரும் தங்க செயினை ஆட்டையை போட்டது தெரிந்தது. அதன் மதிப்பு 1.50 லட்சம் ரூபாய் ஆகும். சிரா போலீசில், அஸ்வதம்மா புகார் செய்துள்ளார். போலீஸ் சீருடையில் வந்த மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.