ADDED : ஆக 01, 2024 12:10 AM

அபூர்வமான சுற்றுலா தலத்தை தேடுவோருக்கு, குடகு மாவட்டத்தின் தங்கக்கோவில் பெஸ்ட் சாய்ஸ். ஒரு முறை இங்கு வந்தால், மீண்டும் மீண்டும் செல்ல துாண்டும் அதிசயமான இடம்.
வாழ்க்கையில் வித்தியாசமான, அபூர்வமான இடங்களை பார்க்க வேண்டும் என்ற ஆசை மக்களுக்கு இருக்கும். இது போன்ற ஆசை இல்லாதவர்களே இருக்க முடியாது. இவர்களை வரவேற்க குடகின் தங்கக்கோவில் காத்திருக்கிறது. ஒரு முறை வந்து பாருங்கள். இது அற்புதமான புத்தர் கோவிலாகும்.
குடகின், குஷால் நகரில் இருந்து, 5 கி.மீ., தொலைவில் உள்ள பைலுகுப்பேவில், தங்கக்கோவில் உள்ளது. இங்கு அதிக எண்ணிக்கையில் புத்த துறவிகள் வசிக்கின்றனர்.
இக்கோவில் அற்புதமான கலை நயத்துடன் கட்டப்பட்டுள்ளது. கோவிலை சுற்றி அழகான தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு அமர்ந்திருந்தால் மனம் அமைதி பெறுவதை அனுபவப்பூர்வமாக உணரலாம். தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் தங்கக்கோவிலை காண வருகின்றனர்.
நான்கு அடுக்குகள் கொண்ட கோபுரம் உள்ளது. பெரிய புத்தர் சிலை உள்ளது. இரண்டு ஓரங்களிலும், பகவான் அமித்தாயா, பகவான் பத்மசம்பவர் உருவச்சிலைகள் உள்ளன. சிலைகள் தங்க முலாம் பூசப்பட்டுஉள்ளது.
முன்புற கோபுரம் தங்க முலாம் பூசப்பட்ட தகடுகளால் சூழப்பட்டுள்ளது. கதவுகளுக்கும் கூட, தங்க நிறத்தில் வர்ணம் பூசப்பட்டுள்ளது. இதே காரணத்தால் தங்கக்கோவில் என்றே அழைக்கின்றனர்.
பனோர் ரின் போஜே என்பவர், பைலுகுப்பேவில் இந்த தங்கக்கோவிலை 1995ல் கட்ட துவங்கினார். 1999ல் முடிக்கப்பட்டது.
இந்த கோவிலுக்கு வந்து, புத்தரை தரிசனம் செய்தால், அமைதி கிடைப்பது மட்டுமின்றி, மனதில் உள்ள தீய எண்ணங்கள், பொறாமை, பேராசை அகன்று, அன்பு, அமைதி, கருணை ஏற்பட்டு மனம் சுத்தமாகும் என்பது ஐதீகம்.
நுழைவாயில் உட்பட கோவிலின் உட்புறத்தில் பிரார்த்தனை சக்கரங்கள் உள்ளன. இவற்றை வலது புறமாக திருப்பினால், நம் உடலில் உள்ள நோய்கள் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
திபெத்தியர்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கிறது. தினமும் காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை, தங்கக்கோவிலை காண அனுமதி உள்ளது. நுழைவு கட்டணம் எதுவும் கிடையாது. இலவசமாக பார்வையிடலாம்.
பெங்களூரில் இருந்து 220 கி.மீ., மங்களூரில் இருந்து 172 கி.மீ., மைசூரில் இருந்து 101 கி.மீ., தொலைவில் பைலுகுப்பே உள்ளது. 80 கி.மீ., தொலைவில் ஹாசன் ரயில் நிலையம் உள்ளது.
கர்நாடகாவின் அனைத்து முக்கிய நகரங்களில் இருந்தும், குஷால் நகருக்கு பஸ் வசதி, தனியார் வாகன வசதி உள்ளது.
குஷால் நகரில் ஏராளமான ரிசார்ட்டுகள், ஹோம் ஸ்டேக்கள் உள்ளன. சுற்றுலா பயணியர் தங்குவதற்கு எந்த பிரச்னையும் இருக்காது. விடுமுறையை கொண்டாட, குடும்பத்துடன், நண்பர்களுடன் வரலாம். சில நாட்கள் தங்கி தங்கக்கோவிலை பார்க்கலாம்.
குஷால் நகர் இயற்கை அழகுகள் கொட்டி கிடக்கும் சுற்றுலா தலமாகும். நீர் வீழ்ச்சிகள், யானைகள் முகாம், ஆறுகள், அணைகள் உள்ளன.
அனைத்தையும் ரசித்து விட்டு, மனமும், உடலும் புத்துணர்ச்சி பெற்று வீடு திரும்பலாம்.