ADDED : ஜூலை 01, 2024 12:34 AM

காசர்கோடு: கேரளாவில், 'கூகுள் மேப்ஸ்' செயலி உதவியுடன் மருத்துவமனைக்கு சென்ற இருவர், வழி தவறி ஆற்றில் காரை விட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
தற்போதைய நவீன தொழில்நுட்ப காலத்தில் நாம் எங்கு செல்ல வேண்டும் என்றாலும், கூகுள் நிறுவனத்தின் கூகுள் மேப்ஸ் செயலியை பயன்படுத்துகிறோம்.
முன்பெல்லாம், ஆட்டோக்காரர்கள் உள்ளிட்ட நபர்களிடம், தெரியாத முகவரி குறித்து கேட்டறிந்து வந்த நாம், தற்போது கூகுள் மேப்ஸ் உதவியுடன் செல்கிறோம்.
பெரும்பாலும் சரியான பாதையை காட்டும் கூகுள் மேப்ஸ், ஒருசில நேரங்களில் தவறான பாதையை காட்டி விடுகிறது.
கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் ரஷீத் என்பவர், தன் நண்பருடன் கர்நாடகாவில் உள்ள மருத்துவமனைக்கு, கூகுள் மேப்ஸ் உதவியுடன் சமீபத்தில் காரில் அதிகாலை சென்றார்.
அப்போது பள்ளஞ்சி என்ற இடத்தில் தரைப்பாலம் இருந்துள்ளது. அப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால், இந்த பாலமானது மழைநீரில் மூழ்கியது. இது தெரியாத அப்துல் ரஷீத், சாலையில் தான் மழைநீர் தேங்கி இருக்கிறது என நினைத்து, காரை ஓட்டினார்.
ஆனால், ஆற்றில் நீர் வேகமாக பெருக்கெடுத்து செல்ல, கார் அடித்து செல்லப்பட்டது. எனினும், ஒரு மரத்தின் மீது மோதியதில் கார் நின்றது. அப்போது, காரின் கதவை திறந்து வெளியே வந்த அப்துல் ரஷீத் மற்றும் அவரது நண்பர், இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு மொபைல் போனில் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர், அப்துல் ரஷீத் மற்றும் அவரது நண்பரை பத்திரமாக மீட்டனர். மேலும், அவர்களது காரையும் மீட்டனர். இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.