குமாரசாமிக்கு எதிராக கோஷம் தேவகவுடா கூட்டத்தில் பரபரப்பு
குமாரசாமிக்கு எதிராக கோஷம் தேவகவுடா கூட்டத்தில் பரபரப்பு
ADDED : ஏப் 17, 2024 06:28 AM

துமகூரு : துமகூரில் பா.ஜ., - ம.ஜ.த., தொண்டர்கள் கூட்டத்தில் தேவகவுடா பேசும் போது, இரு பெண்கள் மேடையில் ஏறி, குமாரசாமிக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் பரபரப்பு நிலவியது.
துமகூரில் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வேட்பாளர் சோமண்ணாவை ஆதரித்து, நேற்று முன்தினம் இரவு தொண்டர்கள் கூட்டத்தில் தேவகவுடா பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மேடை ஏறிய இரு பெண்கள், கிராமப்புற பெண்கள் வழிதவறி செல்வதாக கூறிய குமாரசாமிக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
இதனால் அதிர்ச்சியடைந்த தேவகவுடா, தனது பேச்சை தற்காலிகமாக நிறுத்தினார். அங்கிருந்த பா.ஜ., பெண் தொண்டர்கள், ஒரு மகளிர் போலீசார், இரு பெண்களையும் மேடையில் இருந்து வலுக்கட்டாயமாக கீழே இறக்கி, அழைத்து சென்றனர். பின், அவர்களை போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்றனர்.
இரு பெண்களும் காங்கிரசை சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கின்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பா.ஜ., தொண்டர்கள் கூறுகையில், 'நாட்டின் முன்னாள் பிரதமர் பேசிக் கொண்டிருக்கிறார். அவரின் பாதுகாப்புக்கு ஒரு போலீஸ் கூட நிகழ்ச்சி நடக்கும் அரங்கில் இல்லை. அனைவரும் இங்கு வெளியே நிற்கின்றனர். இது தான் முன்னாள் பிரதமருக்கு அளிக்கும் பாதுகாப்பா' என கேள்வி எழுப்பினர்.
பின், தேவகவுடா தொடர்ந்து பேசினார்.

