7வது சம்பள கமிஷன் அமல்படுத்திய முதல்வருக்கு அரசு ஊழியர்கள் பாராட்டு
7வது சம்பள கமிஷன் அமல்படுத்திய முதல்வருக்கு அரசு ஊழியர்கள் பாராட்டு
ADDED : ஆக 17, 2024 11:16 PM

பெங்களூரு: ஏழாவது சம்பள கமிஷன் அமல்படுத்தியதற்காக, முதல்வர் சித்தராமையாவுக்கு, கர்நாடக அரசு ஊழியர்கள் நேற்று பாராட்டு விழா நடத்தினர்.
கர்நாடக அரசு ஊழியர்களுக்கு, கடந்த மாதம் 7வது சம்பள கமிஷன் அமல்படுத்தப்பட்டது. இதனால், ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 27.5 சதவீதம் உயர்ந்தது. உயர்த்தப்பட்ட முதல் மாத சம்பளம், ஆகஸ்டில் ஊழியர்களின் வங்கிக் கணக்கிற்கு வந்தது.
இதற்காக பெங்களூரு அரண்மனை மைதானத்தில், முதல்வர் சித்தராமையாவுக்கு, மாநில அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. விழாவில் சித்தராமையா பேசியதாவது:
அரசு என்றால், அனைத்து அரசு ஊழியர்களும் அடங்குவர். உங்கள் அனைவரையும் உள்ளடக்கியது தான் அரசு. காந்தி, அம்பேத்கர், பசவண்ணர், சிறந்த சமூகத்தை உருவாக்கும் கனவு கண்டனர்.
அனைவரின் கனவை நனவாக்கும் பொறுப்பு, நம்முடையது. அனைவரின் நலனுக்காக மக்கள் நல திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினருக்கு, அரசு திட்டங்கள் சென்றடைந்தால் மட்டுமே, நமது உழைப்புக்கு அர்த்தம் கிடைக்கும்.
அந்த வகையில், நாம் அனைவரும் சேர்ந்து, சிறந்த சமூகம் உருவாக்குவோம்.
ஊழியர்களின் கோரிக்கைப்படி, பழைய ஓய்வூதிய முறை மற்றும் சஞ்சீவினி சுகாதார திட்டம் மீண்டும் அமல்படுத்துவது தொடர்பாக சரியான முடிவு எடுக்கப்படும்.
நான் முதல்வராக இருக்கும் ஆட்சிக் காலத்தில் தான், 6வது, 7வது சம்பள கமிஷன் அமல்படுத்தப்பட்டது. அரசு ஊழியர்களின் நலனை காக்க எப்போதும் தயாராக இருக்கின்றோம். நீங்களும், நாங்களும் சேர்ந்து மக்களுக்கு நன்றி கடன் செலுத்துவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பள்ளி கல்வித் துறை அமைச்சர் மது பங்காரப்பா, மாநில தலைமைச் செயலர் ஷாலினி ரஜ்னீஷ், மாநில அரசு ஊழியர்கள் சங்க தலைவர் சடக் ஷரி உட்பட பலர் பங்கேற்றனர்.